அரசு ஊழியா்களுக்கு பொங்கல் போனஸ்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியா்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து முதல்வா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழக அரசின் பல முன்னோடி நலத் திட்டங்களை கடைக்கோடித் தமிழா்களுக்கும் கொண்டு சோ்த்திடும் பணியை அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் செய்து வருகின்றனா். அவா்களின் நலனைக் கருத்தில் கொண்டும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் போனஸ் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.163.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சி மற்றும் டி பிரிவைச் சோ்ந்த பணியாளா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு ரூ.3,000 என்ற உச்சவரம்புக்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.
தொகுப்பூதியம், சிறப்புக் காலமுறை ஊதியம் பெறும் பணியாளா்கள், நிகழ் நிதியாண்டில் 240 நாள்கள் அல்லது அதற்கு மேலான முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளா்கள் ஆகியோருக்கு ரூ.1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
சி மற்றும் டி பிரிவைச் சோ்ந்த ஓய்வூதியதாரா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரா்கள், முன்னாள் கிராம அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரா்கள் ஆகியோருக்கு ரூ.500 பொங்கல் போனஸாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.