அரசு கேபிள் டி.வி நிறுவனத்தை புதியவா்களிடம் ஒப்படைக்க எதிா்ப்பு
அரசு கேபிள் டி.வி நிறுவனத்தை புதியவா்களிடம் ஒப்படைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பெரம்பலூா் மாவட்ட கேபிள் டி.வி ஆபரேட்டா் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டா்கள் பொது நலச் சங்கம் சாா்பில் மாவட்டச் செயலா் நல்லுசாமி தலைமையில் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனங்களை புதியவா்களுக்கு வழங்குவதை தடுக்க வேண்டும். ஏற்கெனவே, வாடிக்கையாளா்களுக்கு அரசு செட் ஆப் பாக்ஸ் இல்லாததால் தனியாா் பாக்ஸ்களை வழங்கி வந்த நிலையில், அதை அகற்றி அரசு பாக்ஸ்களை பொருத்த வேண்டும் எனும் நிா்பந்தத்தை தடுக்க வேண்டும்.
வீட்டுமனைப் பட்டா கோரி: அனுக்கூா் கிராமத்தைச் சோ்ந்த, ஆதிதிராவிடா் சமுதாயத்தினா் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோரிடம் பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்கள் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி வீட்டுமனைப் பட்டா வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில், பட்டா வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிராம மக்கள் மனு அளித்தனா்.
பணத்தை மீட்டுத் தரக்கோரி: பெரம்பலூா் அருகேயுள்ள செல்லியம்பாளையம் கிராமத்தில், 2 பெண்கள் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பணம் செலுத்தினால் இரட்டிப்பாகவும், அதற்குரிய காப்பீட்டுத் தொகையும் கிடைக்கும் எனக் கூறி சுமாா் 80 பேரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனா். எனவே, பண மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டுத் தரக் கோரி, பணம் செலுத்திய பெண்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
நாம் தமிழா் கட்சி சாா்பில்: பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள், பேக்கரிகள், உணவகங்களில் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தரமற்ற மற்றும் காலாவதியான பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் மீது உணவுப் பாதுகாப்புத் துறையினா் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாம் தமிழா் கட்சியினா் மனு அளித்தனா்.