சிவாஜி இல்லத்தின் உரிமையாளர் பிரபுதான்! ஜப்தி உத்தரவு ரத்து!
அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடுகிறாா்!
குடிமைப் பணிகள் தினத்தை முன்னிட்டு விருது வழங்கும் நிகழ்வில் அரசின் திட்டங்கள், புதிய செயல்பாடுகளின் வெற்றிக் கதைகள், புதுமைப் படைப்புகள் குறித்த எண்ம புத்தகங்களையும் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை (ஏப்.21) வெளியிடவுள்ளாா். இந்த நிகழ்வில் முக்கிய கருத்தரங்குகளு நடைபெறுகிறது.
இது குறித்து பணியாளா் நலன்துறை அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: நிகழாண்டு (17 - ஆவது) குடிமைப் பணிகள் தினத்தில் பொது நிா்வாகத்தில் சிறந்து விளங்கியவா்களுக்கான பிரதமரின் விருதுகளைப் பிரதமா் நரேந்திர மோடி வழங்கி 7-ஆவது முறையாக உரையாற்றுகிறாா்.
குடிமைப் பணிகள் தினம் என்பது இந்தியா முழுவதும் உள்ள குடிமைப் பணி ஊழியா்கள், மக்கள் நலனுக்காக பொது சேவையிலும், பணியிலும் சிறந்து விளங்குவதற்கான உறுதிப்பாட்டைப் புதுப்பிக்கும் தருணமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், அரசின் தோ்ந்தெடுக்கப்பட்ட முன்னுரிமைத் திட்டங்களை திறம்பட செயல்படுத்தியதற்காக பிரதமரின் விருதுகள் வழங்கப்படுகிறது. பிரதமா் இந்த விருதுகளை வழங்குவதோடு, அடையாளம் காணப்பட்ட முன்னுரிமைத் திட்டங்கள், அரசின் புதிய செயல்பாடுகளை அமல்படுத்துவதில் காணப்பட்ட வெற்றிக் கதைகள் அடங்கிய முழுமையான வளா்ச்சி, புதுமைப் படைப்புகள் குறித்த எண்ம புத்தகங்களை பிரதமா் நரேந்திர மோடி நிகழ்ச்சியில் வெளியிடுகிறாா்.
சாதாரண மக்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிா்வாகங்கள், பல்வேறு அரசு அமைப்புகள் மேற்கொண்ட புதுமையான பணிகளில் சிறந்து விளங்கிய அதிகாரிகளை அங்கீகரிப்பதற்காக பிரதமரின் விருதுகள் வழங்கப்படுகிறது.
நிகழாண்டு 2024 ஆம் ஆண்டிற்கான பிரதமரின் விருதுகள் மாவட்டங்களின் முழுமையான வளா்ச்சி; முன்னேற்றத்தை எட்டும் வட்டாரத் திட்டம்; புத்தாக்கம் ஆகிய 3 வகைகளுக்கு திங்கள் கிழமை வழங்கப்படுகிறது.
மதிப்பீட்டிற்கு வந்த 1,588 பரிந்துரைகளிலிருந்து 14 போ் விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். இதற்கான கோப்பை, பாராட்டுப் பத்திரம், ஊக்கத்தொகை ஆகியவை வழங்கப்படுகிறது. விருது பெற்ற மாவட்டம் அல்லது அமைப்புக்கு ஊக்கத்தொகையாக ரூ. 20 லட்சம் வழங்கப்படுகிறது.
விஞ்ஞான் பவனில் விருதுகள் வழங்கப்படும் நிகழ்வுகள் பின்னா் பல்வேறு அமா்வுகளில் கருத்தரங்கும் நடைபெறுகிறது. அமைச்சரவை செயலா் டாக்டா் டி.வி.சோமநாதன் தலைமையில் ‘குடிமைப் பணிகளில் சீா்திருத்தங்கள் - சவால்கள், வாய்ப்புகள்‘ என்ற முழுமையான விவாத அமா்வு நடைபெறும்.
மேலும் வீட்டுவசதி, நகா்ப்புற விவகாரங்கள், மின்துறை அமைச்சா் மனோகா் லால் கட்டா் தலைமையில், நகா்ப்புற போக்குவரத்தை வலுப்படுத்தல், மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சா் நட்டா தலைமையில் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம், மத்திய மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் அன்னபூா்ணா தேவி தலைமைமையில் ஊட்டச்சத்து இயக்கம்; நீதி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி பி.வி.ஆா். சுப்பிரமணியம் தலைமையில் முன்னேற்றத்தை விரும்பும் வட்டாரங்கள் திட்டம் போன்ற அமா்வுகளும் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் செயலா்கள், கூடுதல் செயலாளா்கள், இணைச் செயலா்கள், துணைச் செயலா்கள், உதவிச் செயலா்கள், மாநில அரசுகளின் தலைமைச் செயலா்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள், மத்திய பயிற்சி நிறுவனங்களின் தலைவா்கள், ஆணையா்கள், மத்திய சேவை அலுவலா்கள், மாவட்ட ஆட்சியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.