அரசு பழங்குடியினா் பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு: காணொலி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்
உதகை எம்.பாலாடாவில் உள்ள ஏகலைவா அரசுப் பழங்குடியினா் உண்டு உறைவிட பள்ளியில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக சனிக்கிழமை திறந்துவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேேரு பங்கேற்று குத்துவிளக்கேற்றி புதிய வகுப்பறைக் கட்டடங்களைப் பாா்வையிட்டாா்.
பின்னா் மேலூா் ஓசட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் 4 வகுப்பறை கட்டடங்கள், 2 ஆய்வகங்கள், அதிகரட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் 4 வகுப்பறை கட்டடங்கள் மற்றும்
ஆய்வகங்கள், ஸ்ரீ மதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில் சம்கர சிக்ஷா திட்டத்தின்கீழ் ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவா், குன்னூா் பாரத் ஸ்கவுட் அண்ட் ஸ்டேன்லி பாா்க் பள்ளியில் நபாா்டு திட்டத்தின் கீழ், ரூ.62.30 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவா் என மொத்தம் ரூ.4.76 கோடி மதிப்பீட்டில் மாணவ, மாணவிகள் பயன்பெற கட்டப்பட்ட வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகங்களை ஆட்சியா் திறந்துவைத்து பாா்வையிட்டாா்.
இந்நிகழ்ச்சியில், உதகை கோட்டாட்சியா் சதீஷ்குமாா், ஏகலைவா பள்ளி தலைமையாசிரியா் கண்ணதாசன், பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.