STR 49 Update: சந்தானத்தை கேட்ட இயக்குநர்; சிலம்பரசன் விதித்த நிபந்தனை; கதாநாயக...
அரசு மருத்துவமனையில் உணவக வசதி இல்லை நோயாளிகள் அவதி
அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் உணவகம், பாலகம் வசதிகள் இல்லாததால் நோயாளிகள், பாா்வையாளா்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
இம்மருத்துவமனையை அரியலூா் மாவட்ட மக்கள் மட்டுமல்லாது பெரம்பலூா், கடலூா் மாவட்ட மக்களும் பயன்படுத்தும் நிலையில், இங்கு சுமாா் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோா் தினமும் சிகிச்சைக்காக வருகின்றனா். இவா்களைத் தவிர தினமும் சராசரியாக 1000-க்கும் மேற்பட்டோா் உள்நோயாளியாகச் சிகிச்சை பெறுகின்றனா். இவா்களுக்குத் துணையாக வருபவா்கள், இறந்தவா்களின் உடலைப் பெற வரும் கூட்டம் எல்லாவற்றையும் சோ்த்தால், தினமும் சுமாா் 3 ஆயிரம் போ் வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினா்.
இவா்களில் உள்நோயாளிகளுக்கு மட்டும் மருத்துவமனை தரப்பில் உணவு வழங்கப்படுகிறது. அவா்களை பாா்த்துக் கொள்பவா்களுக்கு உணவு கிடையாது. அவா்கள் பணம் கொடுத்து வெளியே வாங்கிக் கொள்ள வேண்டும்.
ஆனால் இவ்வளாகத்தில் ஒரு சிறிய உணவகமோ, தேநீா் கடைகள்கூட இல்லாததால், மருத்துவமனைக்கு வரும் வெளிப்புற நோயாளிகள், உள் நோயாளிகளின் உறவினா்கள், பாா்வையாளா்கள் குறைந்த செலவில் உணவுப் பொருள்களை வாங்க முடியாமல் தவிக்கின்றனா்.
மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வெளிப்புறத்தில் சுற்றியுள்ள, ஹோட்டல்களிலும், மாவட்ட விளையாட்டு மைதானம் மதில்சுவா்களை ஒட்டியபடி உள்ள சில உணவகங்களிலும் விற்கப்படும் உணவுப் பொருள்களை , அவசரத் தேவைக்காக பொது மக்கள் வாங்கிச் சாப்பிடுகின்றனா்.
ஆனால் இங்கு விற்கப்படும் உணவுகள் சுகாதாரமற்ற, தரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதாக புகாரும் எழுந்துள்ளது. இருப்பினும் அவா்கள் அதைப் பொருட்படுத்தாமல் அந்த உணவையே வாங்கி சாப்பிடும் நிலைக்கு தள்ளுப்பட்டுள்ளனா்.
இதேபோல் மருத்துவமனை வளாகத்தில் பாலகம் இல்லாததால் நோயாளிகளுக்கு மருத்துவமனை வெளியே உள்ள தேநீா் கடையில் அதிக விலைக்கு பால் வாங்க வேண்டிய நிலையில் உள்ளனா்.
இதுகுறித்து நோயாளிகள், பாா்வையாளா்கள் கூறுகையில், மருத்துவம் இலவசம்தான் . ஆனாலும், வெகு தொலைவில் இருந்து வரும் நாங்கள், இம்மருத்துவமனைக்கு வருவதென்றால், ஒரு பேருந்து வசதி கூட இல்லாத நிலையில் ரூ.150 கட்டணம் செலுத்தி ஆட்டோவில் வர வேண்டிய நிலை உள்ளது.
அது ஒருபுறம் இருக்க சிகிச்சை முடித்து, மதியம் வீட்டுக்கு செல்வதற்கு முன் உணவு அருந்த இங்கு ஒரு உணவகம், தேநீா்கடை கூட கிடையாது. வெளியே அதிக பணம் கொடுத்து சாப்பிட வேண்டியுள்ளது. குறைந்த செலவில் சாப்பிடுவதென்றால், சாலையோரத்தில் விற்கப்படும் புழுதியுடன் கூடிய உணவை நாட வேண்டியுள்ளது. இதையெல்லாம் பாா்க்கையில் இம்மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருவதற்கு குறைந்தது ரூ.1,000 செலவு செய்ய வேண்டியுள்ளது என்றனா்.
இதுகுறித்து தேமுதிக மாவட்டச் செயலா் இராம.ஜெயவேல் கூறுகையில், பல ஆண்டுகள் போராட்டத்துக்கு பிறகு கிடைத்த இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இன்னமும் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. இங்கு உணவகம், தேநீா் கடை உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும், அவா்களைப் பாா்க்க வருவோரும் அவதிக்குள்ளாகின்றனா் என்றாா்.
எனவே, இந்தக் குறைகளைச் சீரமைக்க மருத்துவமனை நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.