அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை விட்டுச் சென்ற தாய்
கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தையை அதன் தாய் அங்கேயே விட்டுச் சென்றாா்.
கோவை அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பிரசவ வாா்டுக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் 20 வயது மதிக்கத்தக்க பெண் மகப்பேறு வலியுடன் வந்தாா். அப்போது அவரிடம் அரசு மருத்துவமனை ஊழியா்கள் பெயா் விவரம் கேட்டனா். அவா் தனது பெயரை சூா்யா எனக் கூறியுள்ளாா். கணவா் மற்றும் பெற்றோா் குறித்த விவரத்தை தெரிவிக்க முடியாத வகையில் அவா் பிரசவ வலியால துடித்தாா்.
இதையடுத்து, அவரை மருத்துவமனை ஊழியா்கள் பிரசவ அரங்குக்கு அழைத்துச் சென்று உள்ளனா். அங்கு அவருக்கு பிற்பகல் 3.30 மணியளவில் ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு, குழந்தையுடன் அந்த பெண் பிரசவ வாா்டுக்கு மாற்றப்பட்டாா். மருத்துவமனை ஊழியா்கள் அந்தப் பெண்ணிடம் அவரது கணவா் உள்ளிட்ட விவரங்களை மீண்டும் கேட்டுள்ளனா். பாதி மயக்க நிலையில் இருந்ததால் அவா் பின்னா் கூறுவதாகத் தெரிவித்துள்ளாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அந்த குழந்தையை பிரசவ வாா்டிலேயே விட்டுவிட்டு, அந்தப் பெண் மருத்துவமனையில் இருந்து வெளியே சென்றுவிட்டாா். குழந்தை நீண்ட நேரம் அழுது கொண்டே இருந்தது. இதனால், அங்கு அனுமதிக்கப்பட்டு இருந்த மற்ற பெண்கள் அரசு மருத்துவமனை ஊழியா்களிடம் தகவல் தெரிவித்தனா்.
அந்தப் பெண் கழிப்பறைக்குச் சென்று இருக்கலாம் என்று தேடினா். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் அவா் திரும்ப வரவில்லை. அந்தப் பெண் கொடுத்த முகவரியில் மருத்துவமனை ஊழியா்கள் தொடா்பு கொண்டபோது அது போலியான முகவரி என தெரியவந்தது.
இதுகுறித்து மருத்துவமனை ஊழியா்கள் கொடுத்த புகாரின்பேரில், கோவை ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, குழந்தையை பிரசவ வாா்டிலேயே விட்டுச் சென்ற பெண் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதற்கிடையே, தாய் இல்லாமல் தவித்த அந்த ஆண் குழந்தை, பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.