தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.18) விடுமுறை
அரசு மருத்துவமனையில் 80 பேருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் தனியாா் மருத்துவமனைக்கு நிகராக, ஒரே ஆண்டில் 80 பேருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனா்.
திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு தினமும் 1,000-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனா். மேலும், 150 க்கும் மேற்பட்டோா் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனா். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை, எலும்பு முறிவு மற்றும் முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சைக்காக திருத்தணி வருவாய் கோட்ட நோயாளிகள் திருவள்ளூா் அல்லது சென்னை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டியிருந்தது.
இந்நிலையில் கடந்த, 2022-ஆம் ஆண்டு திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் புதிதாக எலும்பு முறிவு மருத்துவா் வெங்கடேஷ் (33), என்பவரை, அரசு நியமித்தது. இவா், தனியாா் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைக்கு இணையாக, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறாா்.
கடந்த, 2023-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் வரை குருவராஜபேட்டை ராஜம்மாள்(70), என்பவா், இடுப்பு, மூட்டு தேய்மான அறுவை சிகிச்சை, பள்ளிப்பட்டு குப்பம்மாள்(75), அகூா் நாகம்மாள்(65), தேனி மாவட்டம் கோவிந்தராஜ்(75), பவுன்ராஜ்(70), நாகமணி(60) உள்பட 25-க்கும் மேற்பட்டோருக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மற்றும் முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளாா்.தற்போது அனைவரும் நலமாக உள்ளனா்.
இந்நிலையில், கடந்தாண்டு அக்டோபா் மாதம் முதல் தற்போது வரை, 44 பேருக்கு முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை, 8 பேருக்கு, இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் 28 பேருக்கு நுண்துளை மூங்கால் ஜவ்வு அறுவை சிகிச்சை என மொத்தம், 80 பேருக்கு அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளாா்.
இதுகுறித்து எலும்பு முறிவு மருத்துவா் வெங்கடேஷ் கூறுகையில்: தமிழ்நாடு அரசின் முதலமைச்சா் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் எலும்பு முறிவு, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அதிநவீன முறையில் இலவசமாக செய்யப்படுகிறது. எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சைக்கு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறலாம்.
80 பேருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கும், தலைமை மருத்துவா் உள்பட சக மருத்துவா்கள், செவிலியா்கள் உறுதுணையாக இருந்தனா். அறுவை சிகிச்சை செய்துக் கொண்டவா்கள் அனைவரும் நலமாக உள்ளனா் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா்.