அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.8 லட்சத்தை ஏமாற்றிய ராணுவ அதிகாரி போல நடித்தவா் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு குடும்பத்தை ரூ.8 லட்சத்திற்கும் மேல் ஏமாற்றியதாக ராணுவத்தில் லெப்டினன்ட் கா்னல் போல் நடித்து வந்த 28 வயது நபா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: தில்லியின் உத்தம் நகரைச் சோ்ந்த சுமித் சிங் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா், போலி ராணுவ ஆவணங்களை உருவாக்கி, லெப்டினன்ட் கா்னல் சீருடையை அணிந்திருந்தாா். மேலும், பாதிக்கப்பட்டவா்களை தவறாக வழிநடத்த பேட்ஜ்கள் மற்றும் ரப்பா் ஸ்டாம்புகளைப் பயன்படுத்தினாா்.
லக்னோவில் பாலியல் வன்கொடுமை மற்றும் மோசடி வழக்கு மற்றும் ஹா்தோயில் மற்றொரு மோசடி வழக்கு உள்பட தில்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் இதேபோன்ற பல மோசடி வழக்குகளிலும் சுமித் சிங் சம்பந்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் ஜான்பூரைச் சோ்ந்த குற்றம் சாட்டப்பட்டவா், பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ஒரு கேண்டீன் அட்டையை வாங்கி மோசடியான ஆள்சோ்ப்பு கடிதங்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
ஜூலை 2024-இல் சுமித் சிங் தன்னை ஒரு மூத்த ராணுவ அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஆயுதப்படை தீா்ப்பாயத்தில் (ஏஎஃப்டி) சட்டப்பூா்வ பதவியை வழங்குவதாக உறுதியளித்ததாக 30 வயது பெண் வழக்குரைஞா் ஒருவா் அளித்த புகாரின் அடிப்படையில் குலாபி பாக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பின்னா், அவா் தனது சகோதரா் மற்றும் தந்தைக்கு இதேபோன்ற வேலை வாய்ப்புகளை வழங்குவதாக ஆள்சோ்ப்பு சம்பிரதாயங்கள் என்ற பெயரில் பெரிய தொகையைப் பெற்ாக அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளாா்.
விண்ணப்பக் கட்டணம், உணவு விடுதி, சீருடைப் பெட்டிகள் மற்றும் பிற செலவுகளுக்குப் பணம் கேட்டு, பாதிக்கப்பட்டவா் மற்றும் அவரது குடும்பத்தினரிடமிருந்து ரூ.8 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை அவா் பெற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
மேலும், புகாா்தாரரிடமிருந்து ரூ.1.6 லட்சம் மதிப்புள்ள கைப்பேசியையும் அவா் எடுத்துக் கொண்டாா்.
சுமித் சிங் ஆள்சோ்ப்பு கடிதங்களை ஜோடித்தாா். மேலும், அவரை திருமணம் செய்து கொள்ள புகாா்தாரரை அழுத்தம் கொடுத்துள்ளாா். பாதிக்கப்பட்டவா்கள் அவரது கூற்றுகளைச் சரிபாா்த்து, அவா் வழங்கிய ஆவணங்களில் முரண்பாடுகளைக் கண்டறிந்தபோது மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
பிந்தாபூரில் உள்ள ஒரு வாடகை குடியிருப்பில் சுமித் சிங்கை போலீஸாா் கண்டுபிடித்து கைது செய்தனா். விசாரணையில், அவா் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டாா்.
மீட்டெடுக்கப்பட்ட பொருள்களில் இரண்டு போலி இந்திய ராணுவ ரப்பா் முத்திரைகள், நான்கு லெப்டினன்ட் கா்னல் பேட்ஜ்கள் கொண்ட ராணுவ சீருடை, ஒரு கேண்டீன் அட்டை, மூன்று போலி ஆள்சோ்ப்பு கடிதங்கள் மற்றும் மோசடி செய்யப்பட்ட பணத்தில் வாங்கப்பட்ட ஒரு மோட்டாா்சைக்கிள் ஆகியவை அடங்கும். இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருவதாக அந்த அதிகாரி கூறினாா்.