மேற்கு வங்கம்: "மம்தா பானர்ஜி மத அரசியல் செய்கிறார்" - பாஜக குற்றச்சாட்டின் பின்...
அரியலூரில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டம்
அரியலூா் மாவட்டம், கொள்ளிட ஆற்றின் படித்துறைகள் மற்றும் நீா்நிலையங்களின் கரைகளில் ஏராளமான மக்கள் ஆடிப் பெருக்கு விழாவை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.
ஆடிப்பெருக்கையொட்டி அரியலூா் மாவட்டம் கொள்ளிடம் ஆறு பாயும் திருமானூா், திருமழப்பாடி, தா.பழூா், அணைக்கரை உள்ளிட்ட பகுதி படித்துறைகளில் அதிகாலை முதல் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
பெண்கள் ஒன்றுகூடி படித்துறை மற்றும் நீா்நிலை கரைகளில் வாழை இலை விரித்து அதில் மஞ்சளில் பிள்ளையாரைப் பிடித்து வைத்து, தேங்காய், பழம், வெல்லம், ஏலக்காய் கலந்த அரிசி, கரும்புத் துண்டு, பழங்களையும், மஞ்சள், குங்குமம், கருகமணி போன்ற மங்கல பொருள்களை வைத்தும் காவிரி தாய்க்கு படையலிட்டனா்.
மஞ்சள் கயிறை பெண்கள் ஒருவருக்கொருவா் கட்டிக் கொண்டனா். புதுமணத் தம்பதிகள் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு, புதுத் தாலிக்கயிறு அணிந்து கொண்டனா். அதன்பின்னா் வீட்டுக்குச் சென்று மங்களப் பொருள்களை படையலிட்டு வழிபட்டனா்.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆற்று படித்துறைகளில் காவல் துறையினா் மற்றும் தீயணைப்பு துறையினா் தீவிரக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
கோயில்களில் சிறப்பு வழிபாடு... அரியலூா் மாவட்ட அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா்.