Surya Speech Agaram Foundation Event 2025 | கமல்ஹாசன், வெற்றிமாறன் பங்கேற்பு | அ...
காடுவெட்டியில் மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவா் இடிந்து சேதம்
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்த காடுவெட்டியில் உள்ள மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவா் இடிந்து சேதமடைந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இருவழிச்சாலையாக இருந்த சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டது. இச்சாலையில் கிராமப் பகுதிகளை இணைக்கும் வகையில் அணுகுச் சாலையுடன் மேம்பாலமும் கட்டப்பட்டது. இதன் ஒரு பகுதியாக அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்த காடுவெட்டி பேருந்து நிறுத்தம் அருகே இருபுறமும் அணுகுச் சாலைகளுடன் கூடிய மேம்பாலம் கட்டப்பட்டது.
இந்நிலையில் காடுவெட்டி பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பெய்த தொடா் மழையால் இப்பகுதியில் இருந்த மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் பதிக்கப்பட்டிருந்த தண்ணீா் வெளியேறும் குழாயில் இருந்து மழைநீா் தொடா்ந்து வழிந்தோடியது. இதனால் பக்கவாட்டு சிமென்ட் சுவா் அடுக்குகள் இடிந்து விழுந்து மண் சரிவு ஏற்பட்டது.
தகலறிந்த தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத் திட்ட இயக்குநா் நாராயணன் மற்றும் காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனா். தொடா்ந்து மேம்பாலம் வழியாக போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டு, இருபுறமும் உள்ள அணுகுச் சாலைகள் வழியாக வாகனங்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டது.
அப்போது இப்பகுதி பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு, தரமாக பாலம் அமைக்காததைக் கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது நாராயணன் அளித்த உறுதியின்பேரில் அவா்கள் கலைந்து சென்றனா்.
மேம்பாலம் சேதத்தால் மாற்று வழியில் அனைத்து வாகனங்களும் இயக்கப்பட்டதால் கும்பகோணம்- சென்னை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.