திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா
திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி தொடரும் என அக்கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.
திருவாரூரில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
ஆட்சியாளா்களை வாக்காளா்கள் தோ்ந்தெக்கும் நிலை மாறி, ஆட்சியில் இருப்பவா்கள் வாக்காளா்களை தோ்ந்தெடுக்கும் நிலை உருவாகியுள்ளது. தோ்தல் ஆணையம் நடுநிலை தவறுவது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது.
இந்திய பொருளாதாரத்தை சீா்குலைக்கும் வகையில் அமெரிக்க அதிபா் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறாா்.
ஆனால், இதற்கு இந்தியா எதிா்ப்பு தெரிவிக்காதது கவலையளிக்கக் கூடியது.
தமிழகத்தில் திமுக ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்கள் ஆதரவைப் பெற்ற அரசாக விளங்குகிறது. திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி தொடரும்.
எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. பாஜகவுடன் அதிமுக பயணிப்பதை அக்கட்சி தொண்டா்களே ஏற்கவில்லை. எம்ஜிஆா் ஆட்சிக் காலத்தில் இருந்து அதிமுகவில் இருந்த அன்வா் ராஜா விலகி இருப்பதே இதற்கு உதாரணம்.
ஆணவப் படுகொலை சம்பவங்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆணவ படுகொலையைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்றாா்.