சீனா: ``மன அழுத்ததைக் குறைக்க குழந்தைகளின் சூப்பி சரியா?'' - இளைஞர்களை எச்சரிக்கும் மருத்துவர்கள்
சீனாவில் இளைஞர்கள் மன பதட்டத்தைக் குறைக்கவும், தூக்கத்தை மேம்படுத்தவும் கைக்குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் பசிஃபயர்களைப் (சூப்பி) பயன்படுத்துவது பரவிவருகிறது.
சில ஆன்லைன் வர்த்தக மையங்கள் 2000-க்கும் மேற்பட்ட பெரியவர்களுக்கான பசிஃபயர்களை விற்றுள்ளதாகத் தெரிவிக்கின்றன. குழந்தைகளுக்கான சூப்பிகளை விட சற்றுப் பெரியதாக இருக்கும் இது 100 முதல் 500 யுவான் விலைக்கு விற்கப்படுகிறது. இந்திய மதிப்பில் தோராயமாக, 120 ரூபாய் முதல் 6000 ரூபாய் வரை.
பல கடைகள் பெரியவர்களுக்கான சூப்பிகள் மன அழுத்தத்தைக் குறைத்து தூக்கம் வர உதவுவதாக விற்பனை செய்தாலும் மருத்துவர்களும், நெட்டிசன்களும் இது குறித்து கவலைகளை எழுப்பியுள்ளனர்.
இந்த சூப்பியைப் பயன்படுத்துபவர்கள் இது புகைப்பழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், சரியாக சுவாசிக்கவும் உதவுவதாகக் கூறியிருக்கின்றனர். புகைப்பழக்கத்தை நிறுத்துகையில் ஏற்படும் பதட்டத்தைத் தணிப்பதற்கான உளவியல் ஆறுதலாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.
வேலைகளில் பதட்டமாக உணரும்போது அதைத் தணிப்பதற்காக இவற்றைப் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளனர். இது குழந்தைப் பருவத்தில் இருந்த பாதுகாப்புணர்வைத் தருவதாகக் கூறுகின்றனர்.
ஆனால், அதிகமாக இதனைப் பயன்படுத்துவது, பல் வரிசையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம், மெல்லும்போது வலியை உண்டாக்கலாம், வாயைத் திறக்கவே கஷ்ட்டப்படும் சூழலை உருவாக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
உங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டுமேத் தவிர, உங்களைக் குழந்தைப் போல பாவித்து அதிலிருந்து தப்பிக்க நினைக்கக் கூடாது என உளவியளாலர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.