மகாராஷ்டிர பேரவையில் ரம்மி விளையாடிய அமைச்சருக்கு விளையாட்டுத் துறை ஒதுக்கீடு!
Tsunami: 12 வருடங்களுக்கு முன்பே கணித்தாரா ஜப்பானிய கலைஞர்? - `July5Disaster' வைரலாக காரணம் என்ன?
ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தில் நேற்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 8.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் கம்சாத்கா தீபகற்பத்தில் கட்டிடங்கள் குலுங்கின. ஜப்பானின் ஹொக்கைடோ தீவிலிருந்து 250 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், வரலாற்றில் பதிவான 10 மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்று என அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து கிழக்கு ரஷ்யா மற்றும் ஜப்பானின் கடலோரப் பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கின. இது தொடர்பான காட்சிகள் நேற்று சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. ரஷ்யாவின் சகலின் பகுதியில் உள்ள குரில் தீவுகளில் பெருமளவு கடல்நீர் உட்புகுந்ததில் கட்டிடங்கள் நீரில் மூழ்கின.
ஜப்பானின் பெரிய வடக்கு தீவான ஹொக்கைடோவில் துறைமுகங்கள் சேதம் அடைந்தன. ஆனால், இந்த பேரழிவு நிகழ்வை ஜப்பானிய கார்ட்டூன் கலைஞர் ரியோ டாட்சுகியின் 1999-ம் ஆண்டு வெளியான "தி ஃபியூச்சர் ஐ சா" என்ற கார்ட்டூன் புத்தகத்தில் வந்திருப்பதாக செய்திகள் வெளியாகி வைரலாகியிருக்கிறது.
The Future I Saw:
கார்ட்டூன் கலைஞர் ரியோ டாட்சுகி "தி ஃபியூச்சர் ஐ சா" கார்ட்டூர் புத்தகத்தில், தான் கனவில் பார்த்ததாக 'ஜூலை 5, 2025 அன்று தெற்கு ஜப்பானைத் தாக்கும் சுனாமி வரும்' என குறிப்பிடப்பட்டிருக்கிறார். ஆனால், அவரின் கணிப்பு சில வாரங்கள் தாமதமாக நடந்திருக்கிறது என சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
அவர் கணித்த தேதியிலிருந்து 25 நாள்களுக்குப் பிறகு மிகப்பெரிய நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டதால், மக்கள் ரியோ டாட்சுகியின் கணிப்பை பகிர்ந்துவருகின்றனர். ஜப்பானிய சமூக ஊடகங்களில், #July5Disaster போன்ற ஹேஷ்டேக்குகளும் அதிகரித்து வருகிறது.

இருப்பினும், டோக்கியோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் செக்கியா நவோயா போன்ற நிபுணர்கள், `அத்தகைய கணிப்புகளை அறிவியல் பூர்வமானவை அல்ல' என்று நிராகரித்திருக்கின்றனர். மேலும், `பூகம்பங்களை துல்லியமாக கணிக்க முடியாது' என்றும் வலியுறுத்தினர்.
ஜப்பானிய அதிகாரிகளும் பொதுமக்களை அவரது கணிப்புகளைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தினர், அவை முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் எந்த அறிவியல் அடிப்படையும் இல்லாதவை என்றும் தெரிவித்திருக்கின்றனர். பாபா வாங்காவின் தீர்க்கதரிசனங்கள் மீதான விமர்சனங்களைப் போலவே ரியோ டாட்சுகியின் கணிப்புகளும் தெளிவற்றவை, தற்செயலானவை என்ற கருத்துகளும் வலுத்துவருகிறது.