``பத்மஸ்ரீ விருதை பாதுகாப்பாக வைக்க கூட இடம் இல்லை'' - ஒழுகும் கூரை, வறுமையில் வாடும் துக்கு மாஜ்ஹி
2024-ம் ஆண்டு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டவர்களில் கவனிக்கத்தக்கவர் துக்கு மாஜ்ஹி. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இவர், ஒவ்வொரு நாளும் தனது மிதிவண்டியில் புதிய இடங்களுக்குச் சென்று, தரிசு நிலத்தில் 5,000-க்கும் மேற்பட்ட ஆலமரம், மா மரம் போன்ற மரங்களை நட்டியுள்ளார்.
அதற்காகவே இந்திய அரசால் பத்மஶ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஆனால் அவர் வாழ்க்கை கௌரவமாக இல்லை என்றத் தகவல் அதிர்ச்சியளிக்கும் விதமாக வெளியாகியிருக்கிறது.

மேற்கு வங்க மாநிலத்தின் புருலியாவின் சிந்த்ரி என்ற தொலைதூர காடுகள் நிறைந்த கிராமத்தில் வாழ்ந்து வரும் துக்கு மாஜ்ஹி, எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடும் என்ற அளவில் இருக்கும் ஓடுகள் வேயப்பட்ட கூரையின் கீழ், மழைக்காலங்களில் கரைந்துப்போகும் மண் சுவர் வீட்டில் கடுமையான வறுமையில் சிக்கி தவிக்கிறார்.
சிறுவயதில் தன் தந்தையுடன் வேலைக்குச் சென்றபோது ஒரு பேச்சாளர், ``மரங்கள் இல்லாமல், ஆக்ஸிஜன் இல்லை" என்று கூறுவதை கேட்டார். அறிவியலை முழுமையாகப் புரிந்து கொள்ளாவிட்டாலும், அந்த உணர்வு அவரது வாழ்நாள் மந்திரமாக மாறியது. அந்த வார்த்தைகள்தான் துக்கு மாஜ்ஹியை மரங்களை நோக்கி திரும்பச் செய்திருக்கிறது.
காடுகளை வளர்ப்பதில் அவரது அர்ப்பணிப்பு மற்றும் மரக்கன்றுகளைப் பாதுகாப்பதில் அவரது தனித்துவமான முறைகள் அவருக்கான அங்கீகாரத்தையும், மதிப்புமிக்க விருதையும் பெற்றுத்தந்தது. என்றாலும், அது அவரின் வாழ்க்கை முறையில் எந்த மாற்றத்தையும் அது ஏற்படுத்தவில்லை.

சரிதா-பிர்கிராம், தாவா-சிந்தாரி போன்ற சாலைகள் இப்போது பனியன், பலாஷ், ஷிமுல் போன்ற மரங்களால் பச்சைப் பூத்து இருப்பதற்கு இவரின் அர்பணிப்பே காரணம். இவை அனைத்தும் அவரது அயராத உழைப்பின் அடையாளங்கள்.
ஆனால் அவர் அளித்தப் பேட்டியில், ``சில நாள்களுக்கு முன்பு இரவு முழுவதும் மழை நிற்கவில்லை. என்னால் தூங்க முடியவில்லை. வீடு எங்கள் மீது இடிந்து விழுந்துவிடுமோ என்று பயந்தேன். இந்த வீட்டில்தான் என் ஊனமுற்ற இளைய மகன் ஷம்புவுடன் வசிக்கிறேன். அரசால் எனக்கு ஒதுக்கப்பட்ட ஒரு வீடு என் மூத்த மகன் நிர்மலுக்கு வழங்கப்பட்டுவிட்டது.
என் பெயர் அதில் சேர்க்கப்படவில்லை. ஒரு வீட்டுக்கு ஒரு குடும்பம் மட்டுமே என்பதால், என் குடும்பம் அதில் வசிக்க முடியாது. என் பத்மஸ்ரீ உள்ளிட்ட பிற விருதுகள் பழைய துணிகளைப் போல ஒரு பையில் போட்டு வைத்திருக்கிறேன். அதைப் பாதுகாக்கக் கூட ஒரு அலமாரி இல்லை. ஆனால், என்ன நடந்தாலும் நான் எப்போதும் போல என் மரம் நடும் வேலையைச் செய்கிறேன். பத்மஸ்ரீ விருதை விட எனக்கு ஒரு வீடு வழங்கப்பட்டிருந்தால், குறைந்தபட்சம் என் தலையை சாய்க்க ஒரு இடம் கிடைத்திருக்கும்" என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக பாக்முண்டி தொகுதி மேம்பாட்டு அதிகாரி ஆர்யா தா, ``அவருக்கு வீட்டுவசதி திட்டத்தின் கீழ் ஒரு வீடு வழங்கப்பட்டது. அதில் அவரது மூத்த மகன் வசிப்பதால், துக்கு மாஜ்ஹியின் பெயரை தனித்தனியாக சேர்க்க முடியாது. ஏனென்றால் அவர் அதிகாரப்பூர்வ குடும்பத்தின் தலைவராக இல்லை" என்றார்.