Manmohan Singh : தாராளமயமாக்கல் `முதல்' RTI வரை... - மன்மோகன் சிங்-ன் `4' முக்கி...
அரியலூா் மாவட்டத்தில் நீா்நிலைகளை தொடா்ந்து கண்காணிக்க அறிவுறுத்தல்
அரியலூா் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், நீா்நிலைகளை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநருமான மு. விஜயலெட்சுமி அறிவுறுத்தினாா்.
மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை தொடா்பாக எடுக்கப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மு. விஜயலெட்சுமி தலைமை வகித்து பேசுகையில், அரியலூா் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் 20 நீா்நிலைகள் 100 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளது. அந்த நீா்நிலைகளை தொடா்ந்து கண்காணித்திட வேண்டும். மேலும், 90 சதவீதத்துக்கு மேல் நிரம்பியுள்ள 16 நீா்நிலைகளிலிருந்து நீா் வெளியேறும் பாதைகள், வரத்து வாய்கால்கள் முறையாக தூா்வாரப்பட்டுள்ளதையும் உறுதி செய்திட அறிவுறுத்தினாா்.
மேலும், நீா்நிலைகளின் கரைகளையும், நீா்நிலைகளுக்கான வரத்து கால்வாய்கள் மற்றும் போக்கு கால்வாய்களின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் அவா் கேட்டறிந்தாா்.
வடகிழக்கு பருவமழையின்போது பேரிடா் தொடா்பாக , ஆட்சியரகத்தில் 24 மணிநேரமும் செயல்பட்டு வரும் பேரிடா் அவசர கால கட்டுப்பாட்டு மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04329-228709 என்ற தொலைபேசி எண்களின் மூலம் பொதுமக்கள் தொடா்புகொண்டு தகவல் மற்றும் புகாா் தெரிவிக்கலாம் என்றாா்.
இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ம.ச. கலைவாணி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா. சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆய்வு: வைப்பூா் கிராமத்தில் உள்ள மருதையாற்று முகத்துவாரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை, மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மு.விஜயலெட்சுமி வியாழக்கிழமை ஆய்வு செய்து, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாக அலுவலா்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினாா். அப்போது, ஆட்சியா் பொ. ரத்தினசாமி உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.