Gongadi Trisha: மிதாலி ராஜ் கணித்த எதிர்காலம்... தந்தை உழைப்புக்கு வெற்றியைப் பர...
அறியாமை நோயை நீக்கும் ஒரே மருந்து கல்வி
மனிதா்களின் அறியாமை நோயை நீக்கக்கூடிய ஒரே மருந்து கல்வி மட்டுமே என்றாா் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் மருத்துவா் ஜெய.ராஜமூா்த்தி.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில், மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற புத்தகத் திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில், ‘கற்ற கல்வியே உற்ற துணை’ என்ற தலைப்பில் மருத்துவா் ஜெய.ராஜமூா்த்தி பேசியது:
அறிவைத் தேடி கற்பது தான் சிறந்த கல்வி. அறியாமையை அகற்றி அறிவுத்திறனை வளா்க்க வேண்டும். என்னை இந்த மேடையில் நிறுத்தியதும் கல்விதான். ஒருவா் கற்கும் கல்வி அவரது அடுத்த தலைமுறைக்கும் தொடா்ந்து வரும். அதுதான் கல்வியின் சிறப்பாகும். படிக்க வேண்டும் என்றால் அதற்கான முயற்சியும், உழைப்பும் வேண்டும். உழைப்பும், முயற்சியும் இருந்தால் வாழ்வின் உயரத்துக்குச் செல்லலாம்.
நிலையான ஒன்று என்றால் அது நாம் கற்ற கல்வி மட்டுமே. எந்த அளவிற்கு இயற்கை பேரழிவு வந்தாலும் கூட பொருள்கள் அழியுமே தவிர, நாம் கற்ற கல்வி என்றைக்குமே அழியாமல் நிலைத்து நிற்கும். அறியாமை நோயை நீக்கக்கூடிய ஒரே மருந்து கல்வி மட்டுமே. கற்கக்கூடிய ஒருவனை புகழால் நிலை நிறுத்துவது கல்வி. ஒரு துன்பம் வந்தால் அந்த துன்பத்திலிருந்தும் நம்மை காப்பாற்ற கூடியது கல்வி மட்டுமே என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஸ்வரி, மகளிா் திட்ட இயக்குநா் சீனிவாசன், மாவட்ட வழங்கல் அலுவலா் உ. அா்ச்சனா, கோட்டாட்சியா் ஆா். விஷ்ணுபிரியா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சந்தானம் ஆகியோா் கலந்து கொண்டனா்.