அவனியாபுரம் : துறுதுறு இளைஞர்கள்... சீறும் காளைகள் - டிராக்டர், நிசான் கார் பெறப்போவது யார்?!
உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளை உலகத்தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மதுரை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரபலமானது.
அந்த வகையில் மதுரை மாநகராட்சிக்குள் அமைந்துள்ள அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை இன்று காலை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார். இப்போட்டியில் 1,100 காளைகளுடன் 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். ஒவ்வொரு சுற்றுக்கும் 100 காளைகளும், 75 வீரர்களும் பங்கேற்பார்கள்.
சிறந்த காளைக்கு 11 லட்ச ரூபாய் மதிப்பிலான டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு 8 லட்ச ரூபாய் மதிப்பிலான நிசான் காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது. காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு விதிகளை கடைபிடிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. மாநகர காவல்துறை சார்பில் இரண்டாயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
போட்டியில் கலந்துகொள்ளும் காளைகளின் உரிமையாளர்கள் அதற்கான கியூ ஆர் கோடுடன் கூடிய அனுமதி சீட்டுடன் ஒரே நபர் மட்டுமே வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. மருத்துவ வசதி, சுகாதார வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.