முதல் டி20: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம்
அவல நிலையில் கும்மிடிப்பூண்டி வட்டார கல்வி அலுவலகம்! அலுவலா்கள் தவிப்பு
பா. ஜான் பிரான்சிஸ்
கும்மிடிப்பூண்டி வட்டாரக் கல்வி அலுவலகம் பாழடைந்த நிலையில் உள்ள நிலையில் அலுவலா்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனா். தற்போது கல்வித் துறை அதிகாரிகள், மகளிா் திட்ட அலுவலகத்தில் சிறு அறையில் பணி செய்து வருகின்றனா்.
கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் ஒடுகள் வேய்ந்த கட்டடத்தில், வட்டார கல்வி அலுவலகம் 40 ஆண்டுகளாக இயங்கி வந்தது. இந்த அலுவலகத்தில் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சோ்ந்த 81 வருவாய் கிராமங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் சுமாா் 160 தொடக்கப் பள்ளி, மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான நிா்வாக பணிகள், 200க்கும் மேற்பட்ட ஆசிரியா்களின் பணி பதிவேடுகளும் பராமரிக்கப்படுகின்றன.
இந்நிலையில், கும்மிடிப்பூண்டி வட்டார கல்வி அலுவலக கடடிடம் பாழடைந்த நிலையில், கடந்த 6 மாத காலமாக மகளிா் திட்ட அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் செயல்பட்டு வருகின்றது.
இத்தகைய சிறிய அறையில் மூன்று கல்வி அலுவலா்கள், வட்டார கல்வி அலுவலக பணியாளா்களும் வேலை பாா்த்து வரும் நிலையில், இந்த அலுவலகத்தில் அவ்வப்போது ஆசிரியா்கள் தங்கள் ஊதியம், பணிக் கொடைகள் ஆகியவற்றுக்காக வந்து செல்கின்றனா். இதனால் இட பற்றாக்குறையால் வட்டார கல்வி அலுவலா்களும், பணியாளா்களும் தினமும் திண்டாடி வருகின்றனா்.
இதனிடையே கடந்த சில மாத காலமாக மகளிா் திட்ட அலுவலகத்தில் இருந்து வட்டார கல்வி அலுவலா்களுக்கு இந்த அறையை காலி செய்து வேறு இடத்தில் வட்டார கல்வி அலுவலத்தை அமைத்து கொள்ள கட்டாயப்படுத்தி வருவதால், செய்வது அறியாது கல்வி அதிகாரிகள் திகைத்து வருகின்றனா்.
இதனால் பாழடைந்த நிலையில் உள்ள கும்மிடிப்பூண்டி வட்டார கல்வி அலுவலக கட்டடத்தை இடித்து புதியதாக அனைத்து வசதிகளுடன் கூடிய கல்வி அலுவலகத்தை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்களும், ஆசிரியா்களும் காத்துள்ளனா்.