தபேலா இசைக் கலைஞா் ஜாகிா் ஹுசைன் காலமானார்
பிரபல தபலா இசைக் கலைஞா் ஜாகிா் ஹுசைன் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானதாக அவரது குடும்பத்தினர் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
சான் பிரான்சிஸ்கோ நேரப்படி மாலை 4 மணிக்கு ஜாகிா் ஹுசைன் மிகவும் அமைதியாக காலமானதாக அவரது சகோதரி குர்ஷித் ஆலியா தெரிவித்துள்ளார்.
தீவிர சிகிச்சையில் இருந்தபோதே ஹுசைன் காலமானதாக நேற்று இரவு தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலை அவரது குடும்பத்தினர் மறுத்தனர். பின்னர் அடுத்த சில மணி நேரங்களிலேயே அவர் சிசிகிச்சைப் பலனின்றி காலமானதாக குடும்பத்தினர் அறிவித்தனர்.
ஜாகிா் ஹுசைனின் மறைவு இசையுலகிற்கு பேரிழப்பாகும்.
பிரபல தபலா இசைக் கலைஞா் ஜாகிா் ஹுசைன்(73) இதயம் சம்பந்தப்பட்ட உடல் நல பாதிப்பால், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரங்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவரது உயிர் இவ்வுலகை விட்டு பிரிந்துள்ளது.
புகழ்பெற்ற தபேலா கலைஞா் அல்லா ரக்காவின் மூத்த மகனான ஜாகிா் ஹுசைன், தந்தையைப் பின்பற்றி தபேலாவை உலக அரங்குக்கு கொண்டுச் சென்றாா்.
இந்த ஆண்டின் கிராமி விருதுகளில் வென்ற மூன்று விருதுகள் உள்பட மொத்தம் 5 கிராமி விருதுகளை ஜாகிா் ஹுசைன் பெற்றுள்ளாா்.
இசைத் துறையில் அவரது பணியைப் பாராட்டி 1988-இல் பத்மஸ்ரீ, 2002-இல் பத்ம பூஷண், 2023-இல் பத்ம விபூஷண் ஆகிய உயரிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவப்படுத்தியுள்ளது.