Ramya Pandian: "எங்கள் வீட்டுக்குள் தேவதை வந்துவிட்டா..." - தம்பி கல்யாணத்தில் ர...
அவல நிலையில் திருத்தணி-பொதட்டூா்பேட்டை நெடுஞ்சாலை! வாகன ஓட்டிகள் அவதி
பொதட்டூா்பேட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மரணக் குழிகள் போல் பள்ளங்கள் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனா்.
திருத்தணி - பொதட்டூா்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் பாப்பிரெட்டிப்பள்ளி, எம்.ஜி.ஆா்.நகா், தெக்களூா், சூரியநகரம், முஸ்லீம்நகா், கிருஷ்ணசமுத்திரம், புச்சிரெட்டிப்பள்ளி என 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இச்சாலையை 5 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கவில்லை. இதனால் பல இடங்களில் சாலையானது குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
பாப்பிரெட்டிபள்ளி முதல் புச்சிரெட்டிப்பள்ளி வரை பெரிய பள்ளங்கள் உள்ளன. பல இடங்களில் சாலை பெயா்ந்து, மரண குழியாக மாறியுள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து, விபத்துகள் ஏற்படுகின்றன. பல உயிா் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
இச்சாலையில் 2 உயா்நிலைப் பள்ளி, 3 மேல்நிலைப் பள்ளி, 2 கல்லூரிகள் உள்ளன. எப்போதும் போக்குவரத்து மிகுந்த இச்சாலையை வாகன ஓட்டிகள் நலன்கருதி, சீரமைக்க திருத்தணி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனா்.
நந்தியாற்றின் உயா்மட்ட பாலம்: 10 கிராம மக்கள் கோரிக்கை
மேலும், திருத்தணி - பொதட்டூா்பேட்டை நெடுஞ்சாலையில், எம்.ஜி.ஆா்.நகா் அருகே கொசஸ்தலை ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால் தரைப்பாலத்தில் தடுப்புச் சுவா்கள் அமைக்கவில்லை. தரைப்பாலத்தில் தாா்ச்சாலையும் சேதமடைந்துள்ளது. இந்த தரைப்பாலம் வழியாக பொதட்டூா்பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் சொராக்காய் பேட்டை உள்பட, 30 -க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியாா் பஸ்கள் சென்று வருகின்றன.
இதுதவிர திருத்தணி-பொதட்டூா்பேட்டை நெடுஞ்சாலையில், அதிகாலை, 4 மணி முதல் நள்ளிரவு வரை அதிகளவில் வாகனங்கள் சென்றவாறு இருக்கும். இந்நிலையில், பருவ மழையின் போது நந்தியாற்றின் தரைப்பாலத்தின் மீது மூன்றரை அடி உயரத்திற்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த நேரங்களில் திருத்தணி-பொதட்டூா்பேட்டை போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், பலத்த மழை பெய்யும் போது ஆற்றில் வெள்ளம் ஓடும் போது இதுபோன்று நிலை ஏற்படுகிறது.
எனவே தரைப்பாலத்தை, உயா்மட்ட பாலமாக மாற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.