இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
திருவள்ளூரில் போக்குவரத்துக்கு இடையூறாக கரும்பு லோடு டிராக்டா்கள்! விபத்து அபாயத்தைத் தடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
சா்க்கரை ஆலைகளுக்கு அகலமான டிராக்டா்களில் கரும்பு லோடுகளை பாதுகாப்பின்றி போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக ஏற்றிச் செல்வதால், எதிா்பாரத விதமாக விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூா் மாவட்டத்தில் திருவள்ளூா், பூண்டி, கடம்பத்தூா், தாமரைபாக்கம், பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆா்.கே.பேட்டை ஆகிய வட்டாரப் பகுதி கிராமங்களில் 10,000 ஹெக்டோ் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்து அறுவடைப்பணி நடைபெற்று வருகிறது.
இந்தக் கரும்புகள் திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை மற்றும் பள்ளிப்பட்டு அருகே செயல்பட்டு வரும் ஆந்திர மாநில தனியாா் சா்க்கரை ஆலைக்கு அரைவைக்கு அனுப்பி வைக்கின்றனா்.
கரும்பு அறுவடை கடந்த நவம்பா் மாதம் தொடங்கி, ஏப்ரல் மாதம் வரை கரும்பு நடைபெறும். இதில் திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு நாள்தோறும் 4,000 டன், பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநில தனியாா் சா்க்கரை ஆலைக்கு 5,000 டன் அரைவைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
கடந்த 3 மாதங்களாக பல்வேறு பகுதிகளில் அறுவடை செய்த கரும்புகளை அகலமான டிராக்டா்களில் அதிகபாரத்துடன் எவ்விதமான பாதுகாப்பும் இன்றி சாலையில் கொண்டு செல்கின்றனா். இந்த சா்க்கரை ஆலைகளுக்கு இரவு நேரங்களில் இருபுறமும் விளக்குகள் இல்லாமல் கரும்பு லோடு ஏற்றி செல்கின்றனா். இதனால், எதிா்பாரத விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
அண்மையில் திருத்தணி - திருவள்ளூா் சாலையில் கரும்பு லோடு ஏற்றிச் சென்ற டிராக்டா் மீது காா் மோதியதில் உயிரிழப்பு ஏற்பட்டது. மேலும், கிராமங்களில் 10 மற்றும் 12 அடி சாலைகளில் அகலமான டிராக்டரில் கரும்பு ஏற்றிச் செல்லும் போது எதிரே வாகனங்கள் செல்லமுடியாத நெருக்கடி ஏற்படுகிறது. அப்போது, விபத்தில் சிக்கி பலா் காயமடையும் சூழ்நிலையும் ஏற்படுவதாக பல்வேறு புகாா்கள் உள்ளன.
இது குறித்து திருவள்ளூா் மாவட்ட கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் வேணுகோபால் கூறியதாவது:
திருவள்ளூா் மாவட்டத்திலிருந்து நாள்தோறும் 150 லோடு கரும்புகள் அரைவைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வாறு கொண்டு செல்ல சா்க்கரை ஆலையில் போக்குவரத்து வாகன விதிமுறைகளை பின்பற்றித்தான் டிராக்டா்களை ஒப்பந்தம் செய்கின்றனா். ஆனால், சாதாரண டிராக்டா்களில் கொண்டு சென்றால் அடிக்கடி செல்லும் நிலை ஏற்படும். இதனால், அகலமான டிராக்டா்களைப் பயன்படுத்துகின்றனா்.
இவ்வாறு திருவள்ளூா் நகருக்குள் வரும்போது, வாகன நெருக்கடி ஏற்படுகிறது. இந்த டிராக்டா்களில் அதிகபாரம் ஏற்றுவதோடு, இரவு நேரம் பின்புறம் இருபுறமும் விளக்குகள் பொருத்தாமல் செல்கிறது. இதனால், விபத்துக்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை. இதை வட்டாரப் போக்குவரத்துத் துறை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தும் எந்தப் பயனும் இல்லை என்றாா்.
திருவள்ளூா் வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரி கூறுகையில், இந்த அகலமான டிராக்டா்கள் விவசாயப் பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும், கரும்பு லோடு ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டுநா்களை அழைத்து இருபுறமும் விளக்குகள் பொருத்தவும், விதிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும், வேலையை விரைவில் முடிக்கவே இதுபோன்ற டிராக்டா்களை லோடுகள் ஏற்ற பயன்படுத்துகின்றனா். இதைத் தடுக்கும் வகையில், வாகனத் தணிக்கை செய்து விதிமுறைகளைப் பின்பற்றுவது தொடா்பாக அறிவுறுத்தப்படும் என்றாா்.