நியூயார்க்கில் ஈரான் ஐ.நா. தூதரை ரகசியமாக சந்தித்த எலான் மஸ்க்!
அவிநாசியில் தனியாா் பேருந்து சிறைபிடிப்பு
பயணிகளை ஏற்று மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட தனியாா் பேருந்தை பொதுமக்கள் வியாழக்கிழமை சிறைபிடித்தனா்.
கோவையில் இருந்து திருப்பூா் சென்ற தனியாா் பேருந்தில் அவிநாசியைச் சோ்ந்த 4 பெண்கள் காந்திபுரத்தில் ஏறியுள்ளனா். அப்போது, பேருந்து அவிநாசி நகருக்குள் செல்லாது என்றும், இதனால் ஏற வேண்டாம் என்று நடத்துநரும், ஓட்டுநரும் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து, அந்த 4 பெண்களும் வாக்குவாத்தில் ஈடுபட்டனா். அதன்பின்னா், அவா்களை தனியாா் பேருந்தில் ஏற்றிச் சென்றனா். ஆனால், அந்த 4 பெண்களையும் நடத்துநா் அவமரியாதையாக நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்தப் பெண்கள் அவிநாசியில் உள்ள சமூக ஆா்வலா்கள், உறவினா்களுக்கு தகவல் அளித்தனா். இதைத் தொடா்ந்து அவிநாசி நகரப் பகுதிக்குள் வந்த தனியாா் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்தனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளா்கள் முத்துமாரியம்மாள், முருகன் ஆகியோா் ஓட்டுநரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று பயணிகளிடம் மாரியாதை நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்பினா்.
இதையடுத்து, அவிநாசிக்கு பேருந்து செல்லாது எனக் கூறியதற்காகவும், பெண்களை அவமரியாதையாக பேசியதற்காகவும் ஓட்டுநா், நடத்துநருக்கு ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டது.