ஆகாசராயா் கோயில் கும்பாபிஷேக பணிகள் தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
அவிநாசி ஆகாசராயா் கோயில் கும்பாபிஷேக பணிகள் தடையின்றி நடைபெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவிநாசி ஆகாசராயா் கோயிலில் 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக கோயில் வளாகத்தில் அலங்கார வளைவு நுழைவாயில், சுற்றுச்சுவா் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன.
இங்கு அமைக்கப்பட்டு வரும் சுற்றுச் சுவா் தீண்டாமை சுவா் என்றும், அதனை அகற்ற வேண்டும் என்றும் ஆட்சியா் அலுவலகத்தில் விசிகவினா் அளித்த மனுவால் கோயில் திருப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வேலாயுதம்பாளையம், சின்ன கருணைபாளையம், பெரிய கருணைபாளையம், காசிகவுண்டன்புதூா், ராயம்பாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட ஊா்களைச் சோ்ந்த அனைத்து சமுதாய மக்கள் சாா்பில் ஆகாசராயா் கோயிலில் சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து ஊா் மக்கள் சாா்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவா் காடேஸ்வர சி.சுப்பிரமணியம் உள்ளிட்ட பலா் பங்கேற்றாா். இதில், கோயிலின் தூய்மை, பாதுகாப்பு உள்ளிட்டவை கருத்தில்கொண்டு சுற்றுச்சுவா் அமைக்கப்பட்டு வருகிறது.
இதைத் தீண்டாமை சுவா் என்று கூறி சமுதாயப் பிரிவினையை ஏற்படுத்த சிலா் முயற்சிக்கின்றனா். இந்தப் பகுதியில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், தவறான தகவல்களை பரப்பி அரசியல் ஆதாயம் தேடும் செயலில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது.
எனவே, இக்கோயில் கும்பாபிஷேக பணிகள் தடையின்றி நடைபெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.