ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2025 (மீனம்)
ஆங்கிலப் புத்தாண்டு பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
தனது வாழ்க்கையை தனக்கு மட்டுமல்லாமல் மற்றவருக்கும் பயன்படுமாறு வாழும் மீன ராசி அன்பர்களே!
இந்த ஆண்டு மனதில் தோன்றும் எண்ணங்களைத் தெளிவாக வெளிப்படுத்துவீர்கள். நெருக்கடியான சமயங்களில் மதிநுட்பத்தால் நிலைமைகளைச் சமாளித்து விடுவீர்கள். பொருளாதாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்குமென்றாலும் அவ்வப்போது சிறுசிறு நஷ்டங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். போட்டி, பந்தயம், ஸ்பெகுலேஷன் துறைகளில் வெற்றி கிடைக்கும். நல்லவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அவர்களால் சில முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்கிற பழமொழிக்கு ஏற்ப நன்மை தீமைகளைப் பகுத்தறிந்து காரியமாற்றுவீர்கள். உங்கள் பேச்சுத் திறனால் மற்றவர்களைக் கவருவீர்கள். குழந்தைகள் வழியில் முன்னேற்றங்கள் உண்டாகும். தேக ஆரோக்கியம் சிறப்பாக அமையும். இந்த காலகட்டத்தில் காணாமல்போன பொருள்களும் திரும்பக் கிடைக்கும்.
இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் உங்களின் ஆன்மிக உணர்வு மிகுதியாகவே இருக்கும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெறுவீர்கள். சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பொதுக்காரியங்களிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். வாங்கிய கடன்களையும் தவணை தவறாமல் திருப்பிச் செலுத்துவீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியத்தைக் கொடுப்பீர்கள். வாழ்க்கையில் இருந்த வெறுப்புகள் மறைந்து சிறப்பான பிடிப்புகள் உண்டாகும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலையில் இருந்த பிரச்னைகள் படிப்படியாகக் குறையும். திட்டமிட்ட வேலைகளில் சில இடையூறுகள் தோன்றினாலும் விரைவில் அவை விலகி பதவி உயர்வு கிடைக்கும். பயணங்களால் பணவரவைக் காண்பீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும். சக ஊழியர்களால் ஏற்படும் இடையூறுகளை சாதுர்யமாக முறியடிப்பீர்கள். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் நன்றாகவே முடிவடையும். போட்டிகளால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. பழைய எதிரிகளின் மீது ஒரு கண் இருக்கட்டும். பழைய கடன்கள் வசூலாகும். புதிய யுக்திகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு சமுதாயத்தில் புகழும் அந்தஸ்தும் உயரும். மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். தொண்டர்களின் ஆதரவுடன் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். கட்சியில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள்.
கலைத்துறையினருக்கு பணப்புழக்கம் நன்றாக இருக்கும். உயர்ந்தவர்களைச் சந்தித்து உற்சாகம் அடைவீர்கள். புதிய படைப்புகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். பயணங்களால் நன்மைகளை அடைவீர்கள். செயல்கள் அனைத்தும் வெற்றியைத் தேடித்தரும்.
பெண்மணிகள் கணவரின் ஆதரவுடன் புதிய பொருள்களை வாங்குவர். குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பர். கணவருடன் அன்போடு பழகுவர்.
மாணவமணிகள் முயற்சிக்குத் தகுந்தவாறு மதிப்பெண்களைப் பெறுவர். பாடங்களைப் பிறகு படித்துக் கொள்ளலாம் என்று நினைக்காமல் உடனுக்குடன் மனப்பாடம் செய்யவும். விளையாட்டிலும் வெற்றி கிடைக்கும்.
பூரட்டாதி:
இந்த ஆண்டு நண்பர்கள் இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். அவர்களால் உதவிகள் பெறலாம். சுபநிகழ்ச்சிகளுக்கு இப்போது திட்டமிடலாம். வெகுநாட்களாக தடைப்பட்டு வந்த திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை இப்போது தொடங்கலாம்.
உத்திரட்டாதி:
இந்த ஆண்டு புதிய வீடு கட்டுவதற்கான வேலைகளை இப்போது தொடங்கலாம். வசதியான வீட்டிற்கு குடிபுகவும் வாய்ப்புண்டு. புதிய ஆபரணங்கள் வாங்கலாம். விருந்து விழா என உல்லாசமாக பயணம் மேற்கொள்வீர்கள். சந்தாணபாக்கியம் ஏற்படும்.
ரேவதி:
இந்த ஆண்டு பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சியைக் காணலாம். உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் விலகுவார்கள்.
பரிகாரம் : வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று நவகிரகங்களை வலம் வந்து வணங்கி வரவும். தினமும் முன்னோர்களை வணங்கவும். காக்கைக்கு அன்னமிடவும். ஏழை எளியோர்க்கு உதவவும். வியாழக்கிழமைதோறும் உங்களால் முடிந்த அளவு அருகம்புல்லை மாலையாகக் கட்டி விணாயகருக்கு சாத்தவும். முடிந்தவர்கள் தேங்காய் மாலை சாத்தலாம். மேற்கு, வடக்கு ஆகிய திசைகள் அனுகூலமாக இருக்கும். சந்திரன் - குரு - சுக்கிரன் ஆகிய ஹோரைகளில் எதை ஆரம்பித்தாலும் வெற்றிதான்.