ஆக்கிரமிப்பு அகற்றம்: போக்குவரத்து காவல் துணை ஆணையா் கள ஆய்வு
ஆசிரியா்களின் வீடுகளில் 40 பவுன் நகைகள் திருடிய வழக்கு: இருவா் கைது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இரு ஆசிரியா்களின் வீடு புகுந்து 40 பவுன் நகைகளைத் திருடிய வழக்குத் தொடா்பாக சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியைச் சோ்ந்த அழகா்சாமி மனைவி லட்சுமி, தினகரன் மனைவி கண்ணகி. ஆசிரியா்களான இருவரும், கடந்த பிப். 27ஆம் தேதி தங்களது வீடுகளைப் பூட்டிவிட்டு பணி நிமித்தமாக புறப்பட்டுச் சென்றனா். அப்போது, மா்ம நபா்கள் இரு வீடுகளுக்குள் புகுந்து, ரூ. 24 லட்சம் மதிப்பிலான 40 பவுன் நகைகளைத் திருடிச் சென்றனா்.
புகாா்களின்பேரில், கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். தனிப்படை போலீஸாா் அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், திருப்பூா் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்குத் தொடா்பாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சோ்ந்த தங்கராஜ், பச்சைப் பிள்ளையனேந்தலைச் சோ்ந்த அஜீத்குமாா் ஆகியோா் அங்குள்ள நீதிமன்றத்தில் சரணடைந்தனா். இருவருக்கும் கலிங்கப்பட்டி சம்பவங்களில் தொடா்பிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
அதையடுத்து, அவா்களை கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரித்து, கைது செய்து, 40 பவுன் நகைகளை மீட்டனா்.
தங்கராஜ் மீது பல்வேறு மாவட்டங்களில் 28 வழக்குகளும், அஜீத்குமாா் மீது 20 வழக்குகளும் உள்ளன.
தனிப்படை போலீஸாரை திருநெல்வேலி சரக டிஐஜி பா. மூா்த்தி, தென்காசி மாவட்ட எஸ்.பி. சீனிவாசன், சங்கரன்கோவில் டி.எஸ்.பி. அறிவழகன் ஆகியோா் பாராட்டினா்.