NEEK: ``எதை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்தீங்கன்னு தெரியல, ஆனா...' - மாமா தனுஷ் குற...
ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள மணிப்பூர் முதல்வர் ராஜிநாமா: காங்கிரஸ்
மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பிரேன் சிங்கின் முதல்வர் பதவியை பாஜக ராஜிநாமா செய்யவைத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
மணிப்பூர் மக்களைக் காப்பதற்காக முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யவில்லை எனவும் விமர்சித்துள்ளது.
மணிப்பூரில் மைதேயி - குகி ஆகிய இரு பழங்குடி சமூகத்தினரிடையே நீடித்துவந்த மோதல் போக்கிற்கு தீர்வு காணத் தவறியதால், முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவந்த நிலையில், முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை நேற்று (பிப். 9) ராஜிநாமா செய்தார்.
மணிப்பூர் மக்களின் நலன் கருதி பதவியை ராஜிநாமா செய்வதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பிரேன் சிங்கின் முதல்வர் பதவியை பாஜக ராஜிநாமா செய்யவைத்துள்ளதாக மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் கெளரவ் கோகோய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,
மணிப்பூர் மக்களைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரேன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்யவில்லை. ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள பாஜக அவரை ராஜிநாமா செய்யவைத்துள்ளது.
மணிப்பூர் சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நடந்தால், அதில் பாஜக ஆட்சி கவிழும் என உள் துறை அமைச்சர் அமித் ஷா கணித்துவிட்டார். மணிப்பூரில் மீண்டும் இயல்பு நிலையைக் கொண்டுவர பாஜகவிடம் உரிய திட்டம் உள்ளதாகத் தெரியவில்லை. மக்கள் நலனுக்கு மேலாக கட்சி நலனை முன்வைப்பது, பாஜகவின் டிஎன்ஏ-விலேயே உள்ளது என விமர்சித்திருந்தார்.
காங்கிரஸ் கட்சியும் உச்சநீதிமன்றமும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே பிரேன் சிங் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.