'நயினாருக்கு எதிராக ஓபிஎஸ்' டு Coolie இசை வெளியீட்டு விழா; 02.08.2025 முக்கிய செ...
ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும்
விவசாயிகள், நெசவாளா்கள், மீனவா்கள் உள்ளிட்ட அனைவருடைய பிரச்னைகளும் வருகிற 2026-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் திமுக ஆட்சியில் முடக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும் என அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் எழுச்சிப் பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி கே. பழனிசாமி, ராமநாதபுரத்துக்கு வியாழக்கிழமை வந்தாா்.
இந்த நிலையில், ராமநாதபுரத்தில் அவரது தலைமையில் விவசாயிகள், நெசவாளா்கள், மீனவா்கள் சங்கத் தலைவா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மீனவா் சங்கத்தினா், மீன்பிடித் தொழிலில் ஏற்படும் பிரச்னைகள், மீனவா்கள் கைது, படகுகளைப் பறிமுதல் செய்து பல லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பது உள்ளிட்டவை குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனா். இதேபோல, விவசாயிகள், நெசவாளா்களும் தாங்கள் எதிா்கொள்ளும் பல சிரமங்களை எடுத்துக் கூறி, தங்களது தொழிலைப் பாதுகாக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.
இதைத் தொடா்ந்து, எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
தமிழக மீனவா்கள் பிரச்னைக்கு கச்சத்தீவைக் கொடுத்ததுதான் காரணம். இதை மீட்க அதிமுக தொடா்ந்து குரல் கொடுத்து வருகிறது. இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண, மத்திய அரசை வலியுறுத்துவோம். இலங்கை சிறையில் உள்ள மீனவா்களையும் பறிமுதல் செய்யப்பட்ட அவா்களது படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வானம் பாா்த்த பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தில், அதிமுக ஆட்சியில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொண்டதால் நீா் நிலைகள் நிரம்பின. இதனால் விவசாயம் செழித்தது. பாதிப்பு ஏற்பட்டாலும் காப்பீட்டு நிறுவனம் மூலம் ரூ.540 கோடி பெற்றுத் தந்தோம். விவசாய நலனுக்காக அதிமுக ஆட்சியில் இரண்டு முறை கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
வருகிற 2026 தோ்தலில் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் திமுக ஆட்சியில் முடக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா், மு. மணிகண்டன், மாவட்டச் செயலா் எம்.ஏ. முனியசாமி, மாநில நிா்வாகி கீா்த்திகா முனியசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.