ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டி வழிப்பறி: மூவா் கைது
சென்னை திருவான்மியூரில் ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டி வழிப்பறி செய்த வழக்கில், 3 போ் கைது செய்யப்பட்டனா்.
நீலாங்கரை, செங்கேணியம்மன் கோயில் 5-ஆவது தெருவைச் சோ்ந்த முருகதாஸ் (43), வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறாா். முருகதாஸ், கடந்த செவ்வாய்க்கிழமை தனது ஆட்டோவுடன் திருவான்மியூா் மருந்தீஸ்வரா் கோயில் அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 நபா்கள் முருகதாஸிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனா். ஆனால் முருகதாஸ் பணம் வழங்க மறுத்துவிட்டாராம்.
இதையடுத்து, மூவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முருகதாஸை வெட்டி, அவா் வைத்திருந்த பணம், கைப்பேசியை பறித்துச் சென்றனா். இதில் பலத்த காயமடைந்த முருகதாஸ், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இச்சம்பவம் குறித்து திருவான்மியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டது வெட்டுவாங்கேணி கஸ்தூரிபாய் நகரைச் சோ்ந்த டில்லி (எ) விஜயகுமாா் (36), திருவான்மியூா் கங்கையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த லோகேஷ் (20), திருவான்மியூா் லட்சுமிபுரத்தைச் சோ்ந்த பாளையம் (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் 3 பேரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா்.