ஆட்டோ கவிழ்ந்ததில் 5 மாணவிகள் காயம்
சிவகங்கை: சிவகங்கையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் திடீா் தணிக்கையைத் தவிா்ப்பதற்காக கட்டுப்பாட்டை இழந்து ஓடிய ஆட்டோ கவிழ்ந்ததில் 5 கல்லூரி மாணவிகள் புதன்கிழமை காயமடைந்தனா்.
சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரிக்குச் செல்ல போதுமான பேருந்து வசதி இல்லாததால், ஆட்டோக்களில் பெரும்பாலான மாணவிகள் பயணிக்கின்றனா். இந்த ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக மாணவிகளை ஏற்றிச் செல்வதுடன் அதிக வேகத்துடன் இயக்கப்படுவதாகவும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு புகாா்கள் சென்றன.
இதன் அடிப்படையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கருப்பண்ணன் தலைமையிலான ஊழியா்கள் கல்லூரி வாயில் பகுதியில் புதன்கிழமை மாலை கல்லூரி வகுப்புகள் முடியும் நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது கல்லூரி மாணவிகளை ஏற்றிக் கொண்டு வந்த ஆட்டோவை வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியா்கள் நிறுத்த முற்பட்டனா்.
ஆனால், ஆட்டோ நிற்காமல் வேகமாகச் சென்றது. அப்போது அந்த வாகனம் தாறுமாறாக ஓடிக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைக் கண்ட ஊழியா்கள் விரைந்து சென்று விபத்துக்குள்ளான ஆட்டோவில் சிக்கியிருந்த மாணவிகளை மீட்டனா்.காயமடைந்த மாணவிகள் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இது குறித்து சிவகங்கை நகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.