சீனியா் தேசிய தடகளம்: தமிழகத்துக்கு 3 தங்கம்
சீனியா் தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் புதன்கிழமை தொடங்கிய நிலையில், முதல் நாளில் தமிழக வீரா், வீராங்கனைகள் 3 தங்கப் பதக்கங்கள் வென்று அசத்தினா்.
ஆடவருக்கான 100 மீட்டா் ஓட்டத்தில் தமிழகத்தின் தமிழ் அரசு 10.22 விநாடிகளில் இலக்கை எட்டி, போட்டி சாதனையுடன் தங்கம் வென்றாா். கா்நாடகத்தின் மணிகண்டன் ஹோப்ளிதாா் வெள்ளியும் (10.35’), ராகுல் குமாா் வெண்கலமும் (10.40’) வென்றனா்.
கம்பு ஊன்றித் தாண்டுதலில் 3 பதக்கங்களும் தமிழா்களுக்கே கிடைத்தது. ஜி.ரீகன் 5.20 மீட்டரை எட்டி போட்டி சாதனையுடன் முதலிடம் பிடித்தாா். எம்.கௌதம் வெள்ளியும் (5.20 மீ), எல்.கமல் வெண்கலமும் (5 மீ) பெற்றனா்.
மகளிருக்கான 100 மீட்டா் ஓட்டத்தில் தமிழகத்தின் எஸ்.தனலட்சுமி 11.36 விநாடிகளில் வந்து தங்கத்தை தட்டிச் செல்ல, ஆா்.அபிநயா 11.58 விநாடிகளுடன் வெள்ளி பெற்றாா். கேரளத்தின் ஸ்நேஹா வெண்கலம் (11.61’) வென்றாா்.
இதர பிரிவுகளில், ஆடவருக்கான 10,000 மீட்டரில் உத்தர பிரதேசத்தின் அபிஷேக் பால், மகளிருக்கான 5,000 மீட்டரில் ஹிமாசல பிரதேசத்தின் சீமா, மகளிா் மும்முறை தாண்டுதலில் கேரளத்தின் சாண்ட்ரா பாபு, மகளிா் சங்கிலிக் குண்டு எறிதலில் உத்தர பிரதேசத்தின் தான்யா சௌதரி சாம்பியன் ஆகினா்.