நாகை-தூத்துக்குடி பசுமைச் சாலை: திட்ட அறிக்கைக்கான ஒப்பந்தப்புள்ளி கோரல்
நாகப்பட்டினம்: நாகை-தூத்துக்குடி பசுமைச் சாலை அமைப்பதற்கான விரிவானத் திட்ட அறிக்கை தயாரிக்க, இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
நாகை முதல் தூத்துக்குடி வரையிலான 332 கி.மீ. தொலைவு கிழக்கு கடற்கரை சாலை (உஇத) சுமாா் ரூ. 7,000 கோடி மதிப்பீட்டில் நான்குவழிச் சாலையாக மாற்றப்பட உள்ளது என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிவித்தது.
முன்மொழியப்பட்ட சாலை நாகை-தூத்துக்குடி பிரிவு (சஏ 32) நாகை மாவட்டத்தில் 28.7 கி.மீ., திருவாரூரில் 40.3 கி.மீ., தஞ்சாவூரில் 40.6 கி.மீ., புதுக்கோட்டையில் 39.6 கி.மீ., ராமநாதபுரத்தில் 138.6 கி.மீ., தூத்துக்குடியில் 44 கி.மீ., என 331 கி.மீ. தொலைவுக்கு நான்குவழிச் சாலை அமைகிறது. தற்போதுள்ள இருவழி கிழக்கு கடற்கரை சாலை அகலப்படுத்தப்படும். மேலும், மத்திய அரசு அனுமதி வழங்கியதையடுத்து ரூ.11 கோடி நிதி ஒதுக்கீட்டில், இந்த திட்டத்திற்காக 90 சதவீதம் பசுமைப் பாதை மற்றும் 10 சதவீதம் சாலை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.
சாலைத் திட்டத்தில், 47 சிறிய வாகன சுரங்கப் பாதைகள், 22 பெரிய பாலங்கள், 45 இலகுரக வாகன சுரங்கப் பாதைகள், குளங்களின் மீது 11 பெரிய பாலங்கள், 669 புதிய பெட்டி மதகுகள், 49 பெரிய பாலங்கள் மற்றும் அகலப்படுத்தப்பட வேண்டிய 6 சிறிய பாலப் பணிகள் அடங்கும். இந்த பகுதியில் இந்திய விமானப்படை விமானங்களுக்கு உதவ அவசர தரையிறங்கும் தளம் அமைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நாகை - தூத்துக்குடி இடையே புதிதாக பசுமை வழிச்சாலை அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையால் கோரப்பட்டுள்ளது. அக்டோபா் 3 ஆம் தேதி ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.