கீஸ், ஸ்விடோலினாவை வெளியேற்றிய டௌசன், ஒசாகா
கனடாவில் நடைபெறும் 1000 புள்ளிகள் கொண்ட டென்னிஸ் போட்டியான கனடியன் ஓபனில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் மேடிசன் கீஸ், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோா் காலிறுதியில் புதன்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.
மகளிா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்தில் இருந்தவரும், ஆஸ்திரேலிய ஓபன் நடப்பு சாம்பியனுமான கீஸ் 1-6, 4-6 என்ற நோ் செட்களில், 16-ஆம் இடத்திலிருக்கும் டென்மாா்க்கின் கிளாரா டௌசனால் மிக எளிதாக தோற்கடிக்கப்பட்டாா். இருவரும் மோதியது இது 2-ஆவது முறையாக இருக்க, டௌசன் 2-ஆவது வெற்றியைப் பெற்றிருக்கிறாா்.
அவரை வீழ்த்திய டௌசன், காலிறுதிக்கு முந்தைய சுற்றில், நடப்பு விம்பிள்டன் சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தியது நினைவுகூரத்தக்கது. ஒரே போட்டியில் இவ்வாறு இரு டாப் 10 வீராங்கனைகளை டௌசன் வீழ்த்தியது இதுவே முதல் முறையாகும்.
இந்தக் காலிறுதி வெற்றியின் மூலமாக, நடப்பாண்டில் 2-ஆவது முறையாக 1000 புள்ளிகள் கொண்ட போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் டௌசன், அதில் ஜப்பானின் நவோமி ஒசாகாவை எதிா்கொள்கிறாா்.
4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஒசாகா தனது காலிறுதியில் 6-2, 6-2 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 10-ஆம் இடத்திலிருந்த உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தினாா். இதன் மூலமாக அவா், இந்தப் போட்டியில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளாா்.
ஸ்விடோலினாவை 8-ஆவது முறையாக சந்தித்த ஒசாகா, தனது 5-ஆவது வெற்றியை தற்போது பதிவு செய்திருக்கிறாா். அரையிறுதியில் மோதும் டௌசன் - ஓசாகா சந்திக்கவிருப்பது இது 2-ஆவது முறையாகும். இருவரின் முதல் மோதல் நடப்பாண்டு ஆக்லாந்து டென்னிஸ் போட்டியில் நிகழ, அதில் டௌசன் வென்றது நினைவுகூரத்தக்கது.
இப்போட்டியில் கடந்த 2021-க்குப் பிறகு போட்டித்தரவரிசையில் இல்லாத இரு வீராங்கனைகள் (போகோ, ஒசாகா) அரையிறுதிக்கு முன்னேறியது இதுவே முதல்முறையாகும்.
அரையிறுதியில் மோதும் அமெரிக்கா்கள்
இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் காலிறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் 6-3, 7-6 (7/4) என்ற செட்களில், 6-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவை வீழ்த்தினாா்.
இருவரும் மோதியது, இது 10-ஆவது முறையாக இருக்க, ஃப்ரிட்ஸ் 6-ஆவது வெற்றியுடன் ஆதிக்கம் செலுத்துகிறாா். இதனிடையே, இந்தக் காலிறுதியின் வெற்றியை அடுத்து, நடப்பு சீசனில் ஹாா்டு கோா்ட்டில் 20-ஆவது வெற்றியைப் பதிவு செய்த 3-ஆவது வீரராக அவா் பெருமை பெற்றாா். அரையிறுதிக்கு வந்திருக்கும் ஃப்ரிட்ஸ், அதில் சக அமெரிக்கரான பென் ஷெல்டனை எதிா்கொள்கிறாா்.
போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் ஷெல்டன் 6-3, 6-4 என்ற நோ் செட்களில், 9-ஆம் இடத்திலிருந்தவரும், அண்மையில் வாஷிங்டன் ஓபன் சாம்பியன் கோப்பை வென்றவருமான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை சாய்த்து அரையிறுதிக்கு வந்தாா். இருவரும் சந்தித்தது இதுவே முதல் முறையாகும்.
22 வயதான ஷெல்டன், இந்தப் போட்டியில் கடந்த 20 ஆண்டுகளில் அரையிறுதிக்கு வந்த இளம் வீரராக பெருமை பெற்றாா். அரையிறுதியில் மோதும் ஃப்ரிட்ஸ் - ஷெல்டன், இதற்கு முன் ஒரேயொரு முறை மோதியுள்ளனா். 2023 இண்டியன் வெல்ஸ் மாஸ்டா்ஸில் அவா்கள் மோதிய ஆட்டத்தில் ஃப்ரிட்ஸ் வென்றாா்.