ஆண்களும் பேருந்தில் இலவசமாகப் பயணிக்கலாமா? அமைச்சர் சிவசங்கர் பதில்
ஆண்களும் பேருந்தில் இலவசமாகப் பயணிக்கும் திட்டம் கொண்டுவரப்படுமா என்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்டக் கேள்விக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பதிலளித்தார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், மகளிருக்கான இலவச பயணத் திட்டத்துக்கு தனது முதல் கையொப்பத்தை இட்டார்.
இந்தத் திட்டத்தின் மூலமாக 600 கோடிக்கும் மேற்பட்ட பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளதாகவும் இதன் மூலம் ஒவ்வொரு மகளிரும் மாதம் ரூ.900 முதல் ரூ.1,000 வரை சேமிப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் முன்னதாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், தற்போது சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது கேள்வி நேரத்தின்போது திருவாடனை பேரவை உறுப்பினர் கருமாணிக்கம், “பழைய பேருந்துகளை மாற்றி தரவேண்டும் என்றும் பெண்கள் விடியல் பயணம்போல் ஆண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம் வழங்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், ”புதிய பேருந்துகள் மாற்றிக் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. உங்கள் தொகுதியில் இயங்கும் பழைய பேருந்துகளும் மாற்றியமைத்து தரப்படும்.
ஆண்களுக்கு இலவச பயணம் என்பது வரவேற்கத்தக்கது. இதுவரை ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தவர்கள் பெண்கள், அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்காக விடியல் பயணம், கலைஞர் உரிமைத்தொகைத் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் நிதிநிலை சீராகும்போது உங்களது கோரிக்கையும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும்” என்றார்.
இதையும் படிக்க: பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வர்! ஒப்புதல் பெற்ற 10 மசோதாக்களில் இருப்பது என்ன?