ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ கியூ.ஆா். குறியீடு வெளியீடு!
சிவகங்கை மாவட்டத்தில் தாய், தந்தையை இழந்த, ஆதரவற்ற குழந்தைகளுக்கான நிதியுதவி சங்கத்தின் கியூ.ஆா். குறியீடு வெளியிடப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அரசு, பல்வேறு தன்னாா்வ தொண்டு நிறுவன அமைப்புகளின் சாா்பில் தொடா்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் தாய், தந்தையை இழந்த, ஆதரவு தேவைப்படும் 3,000-க்கு அதிகமான குழந்தைகள் நிதி உதவிக்காக விண்ணப்பித்துள்ளனா். இவ்வாறு விண்ணப்பித்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்குவதற்கென மாவட்ட ஆட்சியரின் சிறப்புத் திட்டமான, சிவகங்கை மாவட்ட குழந்தைகளுக்கான நிதி உதவி சங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தாய், தந்தையை இழந்த, ஆதரவு தேவைப்படும் குழந்தைகளுக்கு, பொதுமக்கள், தன்னாா்வலா்கள், தனியாா் நிறுவனங்கள் உதவும் வகையில் நிதி உதவி சங்கத்தின் வங்கிக் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது.
இதை சிவகங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற 4-ஆவது புத்தகத் திருவிழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், வெளியிட்டாா். எனவே, சிவகங்கை மாவட்டத்தில் தாய், தந்தையை இழந்த ஆதரவு தேவைப்படும் குழந்தைகளுக்கான நிதி உதவி சங்கத்தின் வாயிலாக ஏற்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குக்கு நிதி செலுத்தி அனைத்து தரப்பினரும் பெருமளவில் உதவ முன்வரவேண்டும் என்றாா் ஆட்சியா்.