உபி: "வெறுத்துப்போய் இம்முடிவை எடுத்தேன்" - விவாகரத்து கொடுக்காத கணவனைக் கொன்ற ம...
ஆத்மாவே போ... சூ ஃப்ரம் சோ - திரை விமர்சனம்!
கன்னடத்தில் வெளியாகி ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்த சூ ஃப்ரம் சோ திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
மங்களூருவிலுள்ள கிராமம் ஒன்றில் கதைநாயகன் ரவியண்ணா (சனில் கௌதம்) மற்றும் அவரது நண்பரகள் வசித்து வருகின்றனர். ஊரில் ரவியண்ணாவுக்கு ஒரு மதிப்பு இருப்பதால் எல்லா காரியங்களிலும் முன்நின்று தலைமை ஏற்கிறார். அன்றாடங்கள் காட்டப்பட்ட, ஒருநாள் இரண்டாம் நாயகனாக அசோகா (படத்தின் இயக்குநர் துமினாட்) ஒரு சிக்கலிலிருந்து தப்பிக்க தனக்கு பேய் பிடித்ததாக ஊர்க்காரர்களை நம்பவைக்கிறார். அடுத்தநாள், ரவியண்ணா வரவழைக்கப்பட்டு சோதனை செய்யும்போது அவருக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்படுகிறது.
பின், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூடிப்பேசி பேயை விரட்ட குருஜியை (ராஜ் பி. ஷெட்டி) அழைத்து வருகின்றனர். இல்லாத பேயை எப்படி ஓட்டுவது என நினைத்தால், இன்னோரு கோணத்தில் கதை விரிகிறது. முக்கியமான சில பிரச்னைகள் பேசப்பட்டு, சில மனமாறுதல்களுடன் படம் நிறைவடையும்வரை சுவாரஸ்யமாகக் காட்சிகள் நகர்கின்றன.
சுலோச்சனா ஃப்ரம் சோமேஸ்வரா (சூ ஃப்ரம் சோ - su from so) என்கிற இப்படத்தின் கதை, திரைக்கதையை இயக்குநர் ஜே.பி. துமினாட் 6 ஆண்டுகளாக எழுதியதாகச் சொல்கிறார். பலமுறை அடித்தும், திருத்தியும் எழுத்தப்பட்டது ஒவ்வொரு ஃப்ரேமிலும் நன்றாகத் தெரிகிறது. இப்படத்தின் வெற்றியே, கதைக்காக எழுதப்பட்ட அத்தனைக் கதாபாத்திரங்களும் துல்லியமாக ரசிகர்களைச் சென்றடைகிறது. ஒரு கிராமத்திலிருக்கும் கதாநாயகன், அவனின் நண்பர்கள், சாமியார், பேய் பிடித்ததாக நம்பப்படும் இரண்டாம் நாயகன், கதை நாயகி, பெட்டிக்கடை உரிமையாளர், ஏன் ஸ்கூட்டர் வரை ஒவ்வொரு கதாபாத்திரங்களின் உணர்வுகளும் மிகச்சரியாக எழுதப்பட்டிருக்கின்றன.
முக்கியமாக, பாவா-ஆக நடித்தவர். நம் தெருவில், ஊரில், ஏன் அலுவலங்களில்கூட அப்படியான ஆள் இருப்பார். எல்லாம் தெரிந்ததாகத் தன்னைக் காட்டிக்கொண்டு கூட்டம் தன்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை என்றாலும் அவர்களைத் தேடிச்சென்று அவர்களை மீறிச்செல்ல நினைக்கும் ஒரு மனிதன். அப்படியான ஆள்கள் நகைச்சுவையாகத்தான் எஞ்சுவார்கள் என்பதை அட்டகாசமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
ஒரே கிராமம்தான் கதைக்களம். திருமணமாகாத நல்லவரான கதைநாயகன், ஒரு பெண் குளிப்பதை எட்டிப்பார்க்க நினைத்த ஆண், தாயை இழத்து தவிக்கும் நாயகி என ஒவ்வொருவரின் மறைமுக பிரச்னைகளுக்கும் தற்செயலான கதையைப் பேசி அவரவருக்கான தீர்வுகளுடன் கதை நிறைவடைவது வரை நுணுக்கமாக காட்சிகளும், பயத்தால் விளையும் நகைச்சுவைகளும் மிக ஒழுங்காக திரைக்கதையில் அமர்ந்திருக்கிறது.
ஊருக்குள் சாவு விழுந்தால் அதைத் தொடர்ந்து நல்லது நடக்கும் என்பது இந்திய சமூகங்களின் பெரிய நம்பிக்கைகளில் ஒன்று. இப்படம் அந்நம்பிக்கையைக் கெட்டியாகப் பிடித்து அதை தற்செயலுடன் தொடர்புபடுத்துகிறது. அதனால்தான், படத்தின் ஆரம்பக்காட்சி சாவில் ஆரம்பித்து இறுதிக்காட்சி சுபமாக முடிகிறது. மேலும், ஆண்களின் புரிதல்தன்மையில் ஏற்படும் மாற்றங்களுக்கு பெரும்பாலும் பெண்கள்தான் காரணம் என்பதைத் தொட்டு பலதரப்பட்ட மனித மனங்களை எழுதிய வகையில் இயக்குநர் துமினாட் கவனிக்க வேண்டிய ஆள்தான்.

ஆனால், ஒரு கிராமத்தையும் ஆண்களையும் சரியாக எழுதினாலும் இப்படம் உச்சம் நோக்கி நகரவில்லை. சில கமர்சியல் நோக்கங்கள் அதற்கு தடையாக அமைந்திருப்பதும் தெரிகிறது. முக்கியமாக, கதைநாயகியின் அம்மாவின் மறைவுக்கான காரணங்களை வலுவாக எழுதி, இந்த கிராமத்துடன் தொடர்புபடுத்தியிருந்தால் நிச்சயம் முக்கியமான சில விஷயங்களையும் அலசியிருக்கலாம். அதன் மூலம், கலை வடிவ ரீதியாகவும் இப்படம் முன்சென்றிருக்கும். ஆனால், அந்த தருணம் நிகழவில்லை.
இதனால், மிகச்சிறந்த வாய்ப்பு இருந்தும், பெரும்பான்மை நகைச்சுவையாகக் கழிந்துவிட்டன. பின், இன்னொரு சிக்கல், ஒவ்வொரு நிலத்திற்கே உண்டான உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்புகள். இப்படம் மங்களூரு - உடுப்பி பகுதிகளில் வசூலிலும் விமர்சனங்களிலும் சக்கைபோடு போட்டிருக்கிறது. ஆனால், நிலமும் மக்களும் மிகச்சரியாக எழுதப்பட்டதாலோ என்னவோ மற்ற மொழி ரசிகர்களுக்கு அப்படியொன்றும் சிறப்பான படம் இல்லையே என்கிற எண்ணத்தையும் தரலாம்.
படத்தில் நாயகனாக நடித்த சனில் கௌதம் நல்ல தேர்வு. கதைநாயகன் என்றாலே கட்டுமஸ்தாக, இளமையாக மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதை அடித்து நொறுக்கிக்கொண்டிருக்கிறது கன்னட சினிமா. அதனால்தால், ராஜ் பி. ஷெட்டி நட்சத்திரமாக மிளிர்கிறார். சினிமாவில் எழுத்தை நம்பக்கூடியவர்களுக்கு இது ஒரு முக்கியமான நகர்வு. இதையெல்லாம் எப்போது தமிழ் சினிமா அடைவது?
இயக்குநர் துமினாட் நேர்த்தியாகத் தன் கதாபாத்திரத்தையும் எழுதிக்கொண்டதால் இறுதியில் அவரே நாயகனாக மலர்கிறார். மேலும், படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் அசத்திவிட்டார்கள். குருஜியாக நடித்த ராஜ் பி. ஷெட்டி, பாவா-ஆக நடித்த புஷ்பராஜ் போலர் என ஒரு பட்டாளமே கலக்கியிருக்கிறது.
படத்தின் காலகட்டத்திற்கு ஏற்ப அழகான ஒளிப்பதிவும் வண்ண மேறுகூட்டலும் (colour grading) செய்யப்பட்டிருக்கிறது. சுமேத் இசையமைப்பில் உருவான, ‘டாங்க்ஸ் ஆந்தேம்’ பாடலில் மொத்த கிராமத்தினரையும் கொண்டுவந்துவிட்டனர்.
சூ ஃப்ரம் சோ படத்தைப் பார்க்கும்போது கன்னட திரைத்துறையின் வளர்ச்சி ஆச்சரியத்தைத்தான் ஏற்படுத்துகிறது. கதைக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன் ஒரு கதாபாத்திரத்தை எப்படி வடிவமைக்க வேண்டும் என்பதிலும் நுட்பங்களை அடைந்துள்ளனர். ராஜ் பி ஷெட்டி, ரிஷப் ஷெட்டி போன்றவர்களைப் பின்பற்றக்கூடிய புதிய தலைமுறை உருவாகியிருப்பது இப்படங்களின் வெற்றியைக் காணும்போது நன்றாகத் தெரிகிறது.
இப்படத்தின் மையம் ஆத்மாவே போ. ஆனால், கன்னட சினிமா என்னென்ன கதைகளைப் நவீன திரைமொழியில் பேச வேண்டும் என்கிற ஆத்மாவைக் கண்டடைந்துவிட்டார்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது!
இதையும் படிக்க: தீண்டாமை பேயை அழித்ததா இந்த பாம்? - திரை விமர்சனம்