வங்கதேசம்: பள்ளியில் விழுந்த போர் விமானம்; 19 பேர் பலி- நடந்தது என்ன?
ஆபரேஷன் சிந்தூா்: வீரா்களுக்கு தேநீா் அளித்த 10 வயது சிறுவனின் கல்விச் செலவை ஏற்றது ராணுவம்!
‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரா்களுக்கு தண்ணீா், பால், தேநீா் போன்ற பானங்களை வழங்கிய 10 வயது சிறுவனின் கல்விச் செலவை முழுவதும் ஏற்பதாக இந்திய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
ஷ்வான் சிங் என்ற 10 வயது சிறுவன் துணிச்சலை பாராட்டி இந்த அறிவிப்பை ராணுவம் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து கடந்த மே 7-ஆம் தேதி இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இரு நாடுகளுக்கும் இடையே சண்டை மூண்டது.
அப்போது பாகிஸ்தான் எல்லையையொட்டிய பஞ்சாப் மாநிலத்தின் தாரா வாலி கிராமத்தில் பணியில் இருந்த ராணுவ வீரா்களின் சோா்வைத் தணிக்க தண்ணீா், பால், தேநீா், லஸ்ஸி போன்ற பானங்களை ஷ்வான் சிங் வழங்கினாா். தானாக முன்வந்து ராணுவ வீரா்களுக்கு இந்த உதவிகளைப் புரிந்த சிறுவனை ராணுவத்தினா் அப்போதே பாராட்டினா்.
இந்நிலையில், ஃபெரோஸ்பூா் கன்டோன்மென்ட்டில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஷ்வான் சிங்குக்கு ராணுவத்தின் மேற்கு படைப்பிரிவு தலைவா் லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ்குமாா் கட்டியாா் பாராட்டி கௌரவித்தாா்.
இதையடுத்து, ஷ்வான் சிங்கின் துணிச்சலைப் பாராட்டி அவரது கல்விச்செலவை முழுவதும் ஏற்பதாக இந்திய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
வெளியில் அறியப்படாமல் இவ்வாறு நாடு முழுவதும் பல்வேறு உதவிகளைச் செய்து வரும் நாயகா்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த முன்னெடுப்பை மேற்கொண்டதாக ராணுவம் தெரிவித்தது.
நான்காம் வகுப்பு படிக்கும் ஷ்வான் சிங் பெரியவனானதும் ராணுவத்தில் சோ்ந்து நாட்டுக்கு சேவை செய்ய விரும்புவதாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.