கள்ளக்குறிச்சியில் ரூ. 7.70 கோடியில் கட்டப்பட்ட 19 மருத்துவ கட்டடங்கள்
ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்தது தவறு: அஜய் மாக்கன்
நமது நிருபர்
ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தது தவறு என்று காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மாக்கன் தெரிவித்தார்.
தில்லியில் விரைவில் பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், ஆம் ஆத்மி, பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் புதன்கிழமை வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பின்னர் அஜய் மாக்கன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, ஜன் லோக்பால் போராட்டத்தின் மூலம் தில்லியில் ஆட்சிக்கு வந்தது. ஆனால், ஊழல் எதிர்ப்பு குறைதீர் ஆணையமான ஜன்லோக்பாலை அமைக்க அக்கட்சி தவறிவிட்டது.
நாடு முழுவதும் யாரேனும் மோசடி மன்னன் ஒருவர் இருந்தால் அது கேஜரிவால் தான். அதனால்தான் கேஜரிவால் அரசு மீதும், மத்திய பாஜக அரசு மீதும் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளோம். பஞ்சாபில் கூட ஜன்லோக்பால் ஏன் அமைக்கப்படவில்லை. தில்லியில் துணைநிலை ஆளுநர் உங்களை ஜன் லோக்பால் கொண்டு வர அனுமதிக்கவில்லை என்றால், அதை பஞ்சாபில் அமைக்க வேண்டியதுதானே?
ஆம் ஆத்மி கட்சி 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜன் லோக்பால் கொண்டு வருவதாகக் கூறி உருவாக்கப்பட்டது. இப்போது அவர்கள் அதை மறந்துவிட்டார்கள். தில்லியை லண்டனைப் போல் ஆக்குவோம் என்றும் கூறினர். தற்போது தேசிய தலைநகரை மாசுபடுத்துவதில் முதலிடமாக உருவாக்கியுள்ளனர். ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தது ஒரு தவறு. அதை சரிசெய்ய வேண்டும், மேலும் அது எனது தனிப்பட்ட கருத்து.
தில்லியின் அவல நிலைக்கும், காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்ததற்கும் 2013-இல் 40 நாட்கள் நீடித்த ஆம் ஆத்மி அரசை நாங்கள் ஆதரித்ததுதான் என்பதை நான் இன்று உணர்கிறேன். மேலும், தில்லியில் முன்பு கூட்டணி அமைத்ததன் மூலம் மீண்டும் ஒரு தவறு நடந்திருக்கலாம் என்று நான் நம்புகிறேன், அதை சரிசெய்ய வேண்டும் என்றார் மாக்கன்.