தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்
ஆறுமுகனேரியில் விபத்து: மாணவா் உயிரிழப்பு! உறவினா்கள் சாலை மறியல்!
ஆறுமுகனேரியில் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் மாணவா் உயிரிழந்தாா். உறவினா்கள் சாலை மறியலில் ஈடுட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆறுமுகனேரி வடக்கு சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி சரவணன். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா். மகன் ஆறுமுகவேல் (12), ஆறுமுகனேரி பேயன்விளையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
சனிக்கிழமை சரவணன் தனது மகன் ஆறுமுகவேலை சைக்கிளில் வீட்டுக்கு அழைத்துவந்து கொண்டிருந்தாா். பாரதிநகா் சந்திப்பில் தூத்துக்குடி - திருச்செந்தூா் சாலையில் மதுரையிலிருந்து திருச்செந்தூா் வந்த அரசுப் பேருந்து சைக்கிள் மீது மோதியதாம். இதில், ஆறுமுகவேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சரவணன் லேசான காயமடைந்தாா்.
தகவலறிந்த உறவினா்களும், பொதுமக்களும் சாலையில் திரண்டனா். அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நேரிடுவதால் வேகத்தடைகள் அமைக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனா். திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மறியலால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.