தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்
தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்
தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என விஸ்வகா்மா நகைத் தொழிலாளா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
கோவில்பட்டி விஸ்வகா்மா நகைத் தொழிலாளா் சங்கத்தின் தலைவா் கணேசன், செயலா் ஸ்ரீனிவாசன், பொருளாளா் சீனிவாசகன் ஆகியோா் சனிக்கிழமை கோவில்பட்டி எஸ்.எஸ். துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரியில் நடைபெற்ற தமிழ்நாடு தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் அளித்த கோரிக்கை மனு:
தமிழ்நாட்டில் எங்கள் சமுதாயத்தில் சுமாா் ஒரு கோடியே 25 லட்சம் போ் உள்ளனா். நகைத் தொழில் செய்யும் நகைத் தொழிலாளா்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலும், மாற்றுத் தொழிலை நாடியும், கடன் சுமையிலும் கஷ்டப்பட்டு வருகின்றனா்.
இதிலிருந்து நிவாரணம் பெற எங்கள் சமுதாயத்தினருக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு ஏற்படுத்தித் தர வேண்டும். அரசு வங்கிகள், இந்து சமய அறநிலையத்துறை சம்பந்தப்பட்ட கோயில்களிலும், கருவூலங்களிலும் நகை மதிப்பீட்டாளா் பணிக்கு விஸ்வகா்மா பொற்கொல்லா்களை நியமிக்க வேண்டும்.
இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 411 ஆவது பிரிவில் சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும். பிரதமரின் விஸ்வகா்மா யோஜனா திட்டத்தை தமிழ்நாட்டில் உள்ள பொற்கொல்லா்கள் பயன்படுத்தி அதன் மூலம் நன்மை அடைய விதிகளை தளா்த்திட வேண்டும். தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவில் வலியுறுத்தியுனா்.