`ஆளுநர் அதிகாரங்களை குறை மதிப்பிட்டு இருக்கிறார்கள்' - இறுதிக்கட்டத்தில் வழக்கு; இன்று நடந்தது என்ன?
இன்றும் தொடர்ந்த வழக்கு விசாரணை..!
தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றம் வரை சென்று தமிழ்நாடு அரசு உரிய உத்தரவுகளை பெற்று வருகிறது. தமிழ்நாடு ஆளுநரும் உச்ச நீதிமன்றம் கடிந்து கொண்டதற்கு பின், அது தொடர்பான நடவடிக்கைகளில் இறங்குகிறார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 12 மசோதாக்கள் மீது தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்ததற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுக்கள் மீது கடந்த இரு தினங்களாக நாள் முழுவதுமான விசாரணையாக நடைபெற்று வந்த நிலையில் மூன்றாவது நாள் விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-01-28/h13vpra7/WhatsApp-Image-2025-01-28-at-17.17.26-2.jpeg)
உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ``மாநில பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான மசோதாக்கள் உள்ளிட்ட பல மசோதாக்களை 2023 ஆம் ஆண்டு முதல் குடியரசுத் தலைவர் நிலுவையில் வைத்திருக்கிறார் அது ஏன்? இது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே ஏதேனும் தகவல் பரிமாற்றம் இருந்ததா?” என கேள்வி எழுப்பினர்
அதற்கு பதில் அளித்த ஆளுநர் சார்பில் ஆஜராகும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி, ``வெறும் இரண்டு மாதங்கள் தான் குடியரசுத் தலைவரிடம் மசோதாக்கள் இருந்தது” எனக் கூறியதோடு, இது தொடர்பான கடிதப் பரிமாற்றங்களை தேதி வாரியாக நீதிமன்றத்திடம் படித்துக் காண்பித்தார்.
``தமிழ்நாடு அரசு முன்வைத்த வாதங்களை பார்க்கும் போது..!”
தொடர்ந்து அவர், ``ஆளுநர் ஒரு மசோதாவை ஏன் நிறுத்தி வைத்தார் என்பதற்கான விளக்கங்கள் தெளிவான மொழியில் இருந்தாலே போதும். அவை மிகப்பெரிய கட்டுரைகளாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய துணைவேந்தர்கள் நியமன மசோதாவை பொருத்தவரை, அதன் அதிகார வரம்பு மீறல் மட்டுமில்லாமல் கல்வியின் தரம் குறைந்து வருவது குறித்த தனது கவலைகளை முன்வைத்தே தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுத்தார். ஆளுநர் அரசியல் சாசனம் தனக்கு கொடுத்துள்ள பிரிவு 200 ன் படியே செயல்படுகின்றார். அதை அவர் தனது கடமையாகவும் நினைக்கிறார். ஆனால் தமிழ்நாடு அரசு தரப்பு முன்வைத்த வாதங்களை வைத்து பார்க்கும் போது ஆளுநருக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை மிகவும் குறைத்து மதிப்பிட்டு இருக்கிறார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-03/eb9099ed-cf92-4d67-bd80-999b013212e6/httpswww_google_comsearchq_supreme_court_rlz_1C9BKJA_enIN1007IN1007_hl_en_GB_prmd_nimv_sxsrf_AJOqlzX.png)
ஆளுநருக்கு எதிராக இவர்கள் இத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்கு காரணம், அரசு அனுப்பும் மசோதாக்கள் முறையானதாக இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியது தான்” என அடுக்கடுக்காக வாதங்களை முன் வைத்தார்.
அப்போது, இடை மறித்த நீதிபதிகள், ``அரசியல் சாசனப் பிரிவு 200 இன் படி அவருக்கு இருக்கும் இரண்டாவது வாய்ப்பை பயன்படுத்தி அந்த மசோதாக்களை நிறுத்தி வைத்துவிட்டு, பிறகு அவர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கிறார். அவ்வாறு ஆளுநர் செய்ய முடியுமா? அதற்கு பதிலாக நேரடியாகவே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்கலாமே?” என வினவினர்.
அதற்கு பதில் அளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி, ``அரசு அனுப்பும் மசோதாக்களில் சரி செய்யக்கூடிய தவறுகள் இருந்தால் மட்டும்தான் ஆளுநர் அதை அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். மாறாக மசோதாவில் முரண்பாடுகள் இருந்தால் அப்படி அனுப்ப வேண்டியது இல்லை” என உச்ச நீதிமன்றத்தின் சில தீர்ப்புகளை சுட்டிக்காட்டி வாதங்களை முன் வைத்தார்
இன்றைய வாதங்கள் நிறைவு செய்து கொள்ள அறிவுறுத்திய நீதிபதிகள், வரும் திங்கட்கிழமை முதல் வழக்காக இந்த விவகாரம் விசாரிக்கப்படும் என்றும் அன்றைய தினம் ஆளுநர் தரப்பு வாதங்கள் முடிந்ததற்கு பிறகு தமிழ்நாடு அரசின் பதில் வாதங்கள் நடைபெறும். அன்றைய தினமே அனைத்து தரப்பு வாதங்களையும் முழுமையாக நிறைவு செய்து விடலாம் என தெரிவித்து வழக்கினை ஒத்தி வைத்தனர்.!
ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கு இப்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. !
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play