10 லட்சம் பார்வைகளைக் கடந்த பேட் கேர்ள் டீசரும்! விமர்சனங்களும்!
`இந்துக்களுக்கிடையிலான திருமணம் புனிதமானது; அதை ஒரே வருடத்தில் கலைக்க முடியாது'- உயர் நீதிமன்றம்
உத்தரப்பிரதேசத்தில் திருமண விவாகரத்து வழக்கு ஒன்றில், இரண்டு இந்துக்களுக்கிடையிலான திருமணம் புனிதமானது என்றும், திருமணமான ஓர் ஆண்டுக்குள் அதைக் கலைக்க முடியாது என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.
முன்னதாக, நிஷாந்த் பரத்வாஜ், ரிஷிகா கௌதம் என்ற தம்பதி, இந்து திருமணச் சட்டம் 1955 (HMA 1995), பிரிவு 13-Bன் கீழ் பரஸ்பர விவாகரத்து கோரி, சஹாரன்பூர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இருப்பினும், `திருமணமான ஓர் ஆண்டுகள் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யக் கூடாது.' என்று இதே சட்டத்தின் பிரிவு 14 கூறுவதன் அடிப்படையில், இவர்களின் மனு முதன்மை நீதிபதியால் நிராகரிக்கப்பட்டது.
இதனால், நிஷாந்த் பரத்வாஜ் விவாகரத்து கோரி மேல்முறையீட்டுக்குச் சென்றார். இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் அஸ்வனி குமார் மிஸ்ரா, டோனாடி ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விவாகரத்துக்கு குறைந்தபட்சம் திருமணமான தேதியிலிருந்து ஒரு வருடம் ஆகியிருக்க வேண்டும் என்று HMA 1995 பிரிவு 14 கூறினாலும், விதிவிலக்கான காரணங்கள் இருந்தால் மனுவை விசாரணைக்கு ஏற்கலாம். அதே பிரிவு வழங்கும் விதிவிலக்குக்கான காரணங்கள் இருக்கிறதா என்று நீதிமன்ற அமர்வு ஆராய்ந்தது.
ஆனால், இதில் பரஸ்பரமாக விவாகரத்து கோருவதைத் தவிர, மனுவை ஏற்றுக்கொள்வதற்கான விதிவிலக்கான காரணங்கள் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனால், மேல்முறையீட்டு மனுவை நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்து, திருமணமான தேதியிலிருந்து ஓராண்டு கடந்த பிறகு புதிய விவாகரத்து மனுவை தாக்கல் செய்ய அனுமதித்தது. மேலும், நீதிமன்ற அமர்வு தனது தீர்ப்பில், ``இரண்டு இந்துக்களுக்கிடையிலான திருமணம் புனிதமானது. ஒரே ஆண்டில் கலைக்க முடியாது. சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே அது கலைக்கப்படும்." என்று குறிப்பிட்டது.