வேங்கைவயல் விவாகரம்: `நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க முயல வேண்டாம்' - உயர் நீதிமன்றக் கிளை கருத்து
"இந்த வழக்கை பொறுத்தவரை ஏனோ தானோவென்று குற்றவாளிகளை முடிவு செய்யவில்லை, அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து, ஆவணங்கள் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே குற்றவாளிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது..." என்று வேங்கைவயல் சம்பந்தமான வழக்கில் அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-12-27/z36xwr45/Untitled-10.jpg)
திருமங்கலத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், "கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஆனால் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, சிபிசிஐடி தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக வாதிட்டார். மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வழக்கை தொடர்ந்து நடத்துவதாக தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, "இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரியும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாற்றி மாற்றி பேச என்ன காரணம்?" என கேள்வி எழுப்பினார்.
அப்போது மனுதாரர் தரப்பில், "பாதிக்கப்பட்ட மக்களே குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல. ஆகவே உண்மையான குற்றவாளிகளை கண்டறியக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.
அப்போது கோபமடைந்து நீதிபதி, "ஏற்கெனவே பல போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்த வழக்கில் சம்பவத்தன்று காலை 7:30 முதல் 9:30 மணிக்குள் என்ன நடந்தது என்பது பற்றிய அனைத்து மின்னணு பதிவுகளையும், அறிவியல் பதிவுகளையும் நேற்று அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தெளிவாக பதிவு செய்துள்ளார். எதிர்ப்புக்கு ஏதோ ஒரு நோக்கம் இருக்க வேண்டும். எனவே நீதிமன்றத்தை அரசியல் மேடையாக ஆக்க முயற்சிக்க வேண்டாம்" என்றார்.
அப்போது அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா மீண்டும் ஆஜராகி, "இந்த வழக்கை பொறுத்தவரை ஏனோ தானோவென்று குற்றவாளிகளை முடிவு செய்யவில்லை, அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே குற்றவாளிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2020-10/1792df56-e1ae-4c25-9c77-e43e49f45a18/sat_md_3.jpg)
சம்பந்தப்பட்ட நபர்கள் குற்றவாளிகள் இல்லை என்பதை மனுதாரர் தரப்பில் விசாரணை நீதிமன்றத்தில் உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து வழக்கை நடத்தலாம்" என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி, "முறையான விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இனி போராட்டம் நடத்துவது தேவையற்றது" எனக் கூறி இவ்வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.