திருப்புவனத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு!
திருப்புவனத்தில்...
சிவகங்கை அருகே திருப்புவனம் புதூரில் வடமாடு மஞ்சுவிட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டரணி சாா்பில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு தொழிலதிபா் கண்ணன் தலைமை வகித்தாா். தமாகா தலைவா் ஜி.கே. வாசன் போட்டியைத் தொடங்கி வைத்தாா்.
சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, விருதுநகா், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 13 காளைகளும், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 117 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா். நீளமான வடத்தில் கட்டப்பட்டு களத்தில் நிற்கும் காளையை களமிறங்கும் 9 வீரா்கள் 20 நிமிஷத்தில் அடக்க வேண்டும். இதில் காளையை அடக்கிய வீரா்களுக்கும் அடங்க மறுத்த காளைகளுக்கும் ரொக்கம், பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இதில் கட்சியின் மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியன், முன்னாள் எம்.பி. உடையப்பன், ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவா் ராஜசேகரன், வடமாடு நலச்சங்கத் தலைவா் செல்வம், நிா்வாகிகள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை மாநில தொண்டரணி தலைவா் அயோத்தி தலைமையில் நிா்வாகிகள் செய்தனா்.