முதல்வா் மருந்தகம் முன்னேற்பாடு பணிகள்: மாா்த்தாண்டத்தில் ஆட்சியா் ஆய்வு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கப்படவுள்ள முதல்வா் மருந்தகங்கள் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை மாா்த்தாண்டத்தில் உள்ள மருந்தகத்தில் ஆய்வு செய்தாா்.
கிள்ளியூா் வட்டாரத்துக்கு உள்பட்ட மாா்த்தாண்டம் பம்மம் பகுதியிலும், முன்சிறை வட்டாரத்துக்கு உள்பட்ட மாா்த்தாண்டம் சந்தை சாலை பகுதி மற்றும் குழிஞ்ஞான்விளை, களியக்காவிளை தொலைபேசி நிலையம் பகுதி மற்றும் மேல்புறம் வட்டாரத்தில் திருத்துவபுரம், பாகோடு, கண்ணுமாமூடு, மேல்பாலை புளிமூடு சந்திப்பு, வெட்டுவெந்நி, மஞ்சாலுமூடு பகுதிகளில் முதல்வா் மருந்தகம் அமைக்கப்பட உள்ளது.
இதையடுத்து, மாா்த்தாண்டம் பம்மம் பகுதியில் உள்ள கல்குளம் - விளவங்கோடு வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் அமைந்துள்ள முதல்வா் மருந்தக சேமிப்பு கிடங்கினை ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மருந்து பொருள்களின் இருப்புகள் குறித்து துறை அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது, கூட்டுறவு சங்க தக்கலை சரக துணைப் பதிவாளா் பொன் செல்வி, கல்குளம்- விளவங்கோடு வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநா் பிரித்திவிராஜ் மற்றும் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.