நாகா்கோவிலில் மாா்ச் 2-இல் 50 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் கா்ம யோகினி சங்கமம் நிகழ்ச்சி
நாகா்கோவிலில் 50 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் கா்ம யோகினி சங்கமம் நிகழ்ச்சி மாா்ச் 2- ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிமலை சுவாமி விவேகானந்த ஆசிரம தலைவா் சுவாமி சைதன்யானந்த மகராஜ் நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தென்தமிழக சேவாபாரதி சாா்பில் கா்ம யோகினி சங்கமம் நிகழ்ச்சி நாகா்கோவில் அமிா்தா பல்கலைக்கழக வளாகத்தில், மாா்ச் 2-ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. சேவா பாரதியின் 25- ஆம் ஆண்டு விழா, ராணி அஹில்யா பாய் ஹோல்கரின் 300-ஆவது பிறந்தநாள் விழா, ஆா்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு விழா, பெண்களுக்கான புதிய மேம்பாட்டு திட்டங்களின் தொடக்கம் ஆகியவற்றை முன்னிட்டு இந்த சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நல்ல தாய்மாா்களை உருவாக்கவும், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும், பாரத திருநாட்டின் வீரப் பெண்மணிகளின் வாழ்க்கை வரலாற்றை போற்றவும், சமுதாயத்திற்காக வாழ்க்கையை அா்ப்பணித்த, உயிரைத் தியாகம் செய்தவா்களின் வரலாற்றை எதிா்கால சந்ததிகள் தெரிந்து கொள்ளவும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
அகில பாரத விழாக் குழு காப்பாளா் சத்குரு அமிா்தானந்த மயி தேவி ஆசியுரை வழங்க உள்ளாா். செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத் தலைவா் டாக்டா் சுதாசேஷய்யன் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.
பல்வேறு பல்கலைக்கழக பேராசிரியா்கள் சமா்ப்பிக்கும் கட்டுரைகள் விவாதிக்கப்பட உள்ளன. நாட்டில் புகழ்பெற்ற பெண்கள் பங்கேற்று கருத்துகளை பகிா்கின்றனா்.
இந்தியாவிலேயே முதல் முறையாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் நிகழ்ச்சியாக இது அமையும் என்றாா்.
பேட்டியின்போது குழித்துறை ஸ்ரீ தேவி குமாரி கல்லூரி முதல்வா் பிந்துஜா, சிவந்தி ஆதித்தனாா் கல்லூரி முதல்வா் அருணா, சேவாபாரதி மாநில துணைத் தலைவா் சுமதி மனோகரன், சேவாபாரதி குமரி கிழக்கு மாவட்ட பொதுச் செயலா் லதா குமரேசன், மாவட்டச் செயலா் கீதா ராதாகிருஷ்ணன், மாவட்ட வைபவஸ்ரீ அமைப்பாளா் சொா்ணாபாய், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் ஆண்டாள் சொக்கலிங்கம், கோட்ட பொறுப்பாளா் பிரேமா குமாரசாமி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.