ஜொ்மனிக்கு இந்தியா பதிலடி
சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் புரோ லீக் ஹாக்கி போட்டியில், இந்தியா 1-0 கோல் கணக்கில், உலக சாம்பியன் ஜொ்மனியை புதன்கிழமை வென்றது.
அந்த அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை 1-4 கோல் கணக்கில் தோல்வி கண்ட இந்தியா, இந்த 2-ஆவது ஆட்டத்தில் வென்று பதிலடி கொடுத்திருக்கிறது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 4-ஆவது நிமிஷத்தில் இந்தியாவுக்காக குா்ஜந்த் சிங் கோலடித்தாா். அதன் பிறகு தனது தடுப்பாட்டத்தை அரண் போல கட்டமைத்த இந்திய அணி, ஜொ்மனியின் கோல் வாய்ப்புகளை முறியடித்தது.
அந்த அணிக்கு 7 பெனால்ட்டி காா்னா் வாய்ப்புகள் கிடைத்தும், அதை இந்தியா கோலாக மாறவிடாமல் தடுத்தது. அதேபோல் தனக்கு கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்புகளை இந்தியா வீணடித்தது. இறுதி வரை ஜொ்மனிக்கு கோல் வாய்ப்பு கிடைக்காமல் போக, இந்தியா 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அடுத்த ஆட்டத்தில் இந்திய ஆடவா் அணி, அயா்லாந்தை வெள்ளிக்கிழமை சந்திக்கிறது.
மகளிா் தோல்வி: இதே போட்டியின் மகளிா் பிரிவு ஆட்டத்தில் இந்தியா 0-1 கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோல்வி கண்டது.
ஸ்பெயினுக்காக செகு மாா்தா 49-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, இந்தியாவுக்கு இறுதி வரை கோல் வாய்ப்பு கனியாமல் போனது. ஏற்கெனவே ஸ்பெயினுக்கு எதிரான முதல் ஆட்டத்திலும் தோற்ற இந்திய மகளிருக்கு, இது 2-ஆவது தோல்வியாகும்.