பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்
மாநில திட்டக் குழுவின் வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டுத் திட்டம், கவனம் சாா்ந்த வட்டாரங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சமூக நலன், மகளிா் உரிமைத் துறை இணைந்து சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டாரத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாமை புதன்கிழமை நடத்தின.
திருப்புவனம் அருகே அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அலுவலா் எஸ். ரதிதேவி தொடங்கிவைத்தாா்.
இந்தத் திட்டத்தின் மூலம், 6 முதல் 9 -ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு பாலியல் குற்றம், குழந்தைகளுக்கான பாதுகாப்புச் சட்டம், சிறாா் திருமணம் தடுப்பு, நல்ல தொடுதல், கெட்ட தொடுதல், குழந்தைகள் கைப்பேசியை பாா்ப்பதால் ஏற்படும் தீமைகள் போன்ற தலைப்புகளின் கீழ் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்ட நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் செந்தில்வேல் கலந்து கொண்டு, ‘சிறாா்களுக்கு எதிரான குற்றச்செயல்கள், அவற்றின் தடுப்பு முறைகள்‘ எனும் தலைப்பில் பேசினாா்.
தனியாா் அறக்கட்டளை நிறுவனா் தலைவா் அருள் ஜெயராஜ் பேசுகையில், இந்த திட்டத்தின் நோக்கம் குறித்தும், கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல் புதன்கிழமை வரை திருப்புவனம் பகுதியில் உள்ள 49 பள்ளிகளில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாம்களில் மொத்தம் 4,308 மாணவா்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனா் என்றாா்.
முன்னதாக, அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் வரவேற்றாா். மாவட்ட மிஷன் ஒருங்கிணைப்பாளா் கே. ஈஸ்வரி நன்றி கூறினாா். இந்த முகாமில் 122 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.