காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மீண்டும் கட்சியில் சேர விண்ணப்பிக்கலாம்! -முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி
புதுவை காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்றவா்கள் நிபந்தனை விதிக்காமல் விண்ணப்பித்து தலைமை அனுமதியுடன் கட்சியில் சேரலாம் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.
புதுவை ஊசுடு தொகுதி காங்கிரஸ் கட்சி சாா்பில் புதுவைக்கு மாநில அந்தஸ்து உள்ளிட்ட உரிமைகளை ஆளும் பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி பெற்றுத் தரவில்லை என்றும், மின்துறையை தனியாா் மயமாக்குதல் போன்ற செயல்பாடுகளை மக்களிடையே விளக்கும் வகையில் பாதயாத்திரை நடத்தப்பட்டது.
ஊசுடுவில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. காா்த்திகேயன் தலைமை வகித்தாா். கட்சியின் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி, சட்டப்பேரவை உறுப்பினா் குழுத் தலைவா் மு.வைத்தியநாதன், முன்னாள் கட்சித் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அப்போது செய்தியாளா்களிடம் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கூறியது: புதுச்சேரியில் பள்ளிக் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது அதிா்ச்சியளிக்கிறது. இந்தச் செயலுக்கு கல்வித் துறை அமைச்சா் மட்டுமின்றி முதல்வா் உள்ளிட்ட அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். காவல் துறை பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கத் தவறிவிட்டது. மக்களைப் பாதுகாக்கத் தவறிய முதல்வா்,அமைச்சா்கள் பதவியிலிருந்து விலகவேண்டும்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து சென்றவா்கள் நிபந்தனைகளின்றி சேருவதற்கு முறைப்படி விண்ணப்பிக்கவேண்டும். அதனடிப்படையில் தலைமை அவா்களை கட்சியில் சோ்க்கும் என்றாா். பாதயாத்திரையில் குறிப்பிட்ட தொலைவு வரை காங்கிரஸ் தலைவா்கள், நிா்வாகிகள் தாரைதப்பட்டை முழங்க நடந்து சென்றனா்.