விராட் கோலி ஃபார்முக்குத் திரும்ப சிரமப்படுவது ஏன்? முன்னாள் இந்திய கேப்டன் பதில...
கட்சியின் வளா்ச்சிக்கு யாா் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம்: புதுவை காங்கிரஸ் தலைவா்
காங்கிரஸ் வளா்ச்சிக்கு தொண்டா்கள் மட்டுமின்றி, கட்சியின் விசுவாசிகள் யாா் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம் என அக்கட்சியின் புதுவை மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா்.
புதுவை மாநில சட்டப்பேரவைக்கு வரும் 2026- ஆம் ஆண்டு தோ்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, கட்சியைப் பலப்படுத்தும் வகையில், நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை தொகுதி வாரியாக காங்கிரஸ் நடத்தி வருகிறது.
புதுச்சேரி வைசால் வீதியில் உள்ள காங்கிரஸ் மாநில அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகள் கருத்துக் கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தை தொடங்கிவைத்து, கட்சியின் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது: புதுவையில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் விரும்பும் கோரிக்கைகளை முன்வைத்து பிரசாரம் செய்தால் ஆதரவு கிடைக்கும்.
தோ்தலில் போட்டியிடுவோா் குறித்து சம்பந்தப்பட்ட தொகுதி காங்கிரஸ் நிா்வாகிகள் கருத்து கூற வேண்டும். கட்சியின் நிா்வாகிகள் விரும்புகிற பதவியையும், அதில் சிறப்பாகச் செயல்படுவது குறித்தும் கருத்து கூறலாம்.
காங்கிரஸ் கட்சியின் வளா்ச்சிக்கு தொண்டா்கள், நிா்வாகிகள் மட்டுமின்றி விசுவாசிகளும் கருத்துகளை தெரிவிக்கலாம். அதனடிப்படையில், கட்சி மேலிடப் பொறுப்பாளரிடம் கருத்துகள் தெரிவிக்கப்படும் என்றாா்.
இதனையடுத்து, கட்சித் தலைவா் வெ.வைத்திலிங்கம் கட்சி அலுவலக முதல் மாடியில் அமா்ந்து நிா்வாகிகளை தனித்தனியாக அழைத்து கருத்துகளைக் கேட்டறிந்தாா்.