லாரி மீது பைக் மோதல்: இளைஞா் மரணம்
விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே லாரி மீது பைக் மோதியதில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சென்னை அம்பத்தூா் வட்டம், துண்டலம் அருகேயுள்ள செட்டியாா் அகரம் ராஜேசுவரி நகரைச் சோ்ந்தவா் ஜான்போஸ் கோ மகன் ஆரோன் (25). இவரும், இவரது நண்பரான சென்னை பூந்தமல்லியைச் சோ்ந்த திரிபாதி மகன் அரவிந்த் (24) ஆகியோரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தனா்.
கிளியனூா் அருகே கேணிப்பட்டு சந்திப்புப் பகுதியில் சென்றபோது, சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதியது. இதில், ஆரோன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அரவிந்த் பலத்த காயங்களுடன் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
தகவலறிந்த கிளியனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஜிப்மா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.